மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வரும் முத்தழகு தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் முத்தழகு. இந்த தொடரைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.
இந்தத் தொடரில் நடிகை ஷோபனா முத்தழகு பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷிஷ் சக்ரவர்த்தி நடிக்கிறார். அவர்களுடன் வைஷாலி, லட்சுமி வாசுதேவன் உள்ளிட்டோரும் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கிராமத்தில் வளர்ந்த முத்தழகு என்ற பெண், நகரத்து பின்னணி கொண்ட நாயகனை திருமணம் செய்துகொண்டு நகரத்துக்கு வருகிறார். அங்கு நாயகனை விரும்பிய பெண் ஒருவர், முத்தழகுக்கு செய்யும் இடையூறுகளை முத்தழுகு எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே இத்தொடரின் கதை.
தேவதா - அனுபந்தல ஆலயம் என்ற தெலுங்குத் தொடரின் மறு உருக்கமாக முத்தழகு எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இத்தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதன் காட்சிகள் இந்த வார இறுதியில் ஒளிபரப்பப்படவுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் முத்தழகு தொடர், திடீரென நிறைவடையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.