
தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்படும் தொடர்களின் பட்டியலில் சிறகடிக்க ஆசை தொடர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
சன் தொலைக்காட்சியின் முன்னணி தொடர்களைப் பின்னுக்குத்தள்ளி விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் முதலிடம் பிடித்துள்ளது.
இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் சின்னத்திரை தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. சின்னத்திரை தொடர்கள் பெண்களுக்கானது மட்டுமே என்ற நிலை மாறி, தற்போது அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன.
அதனால், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நேரம் போலவே, அதன் ஓடிடி தளங்களிலும் சின்னத்திரை தொடர்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், தொலைக்காட்சிகளில் இரவுத் தொடர்கள் பகல் வேளையிலும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் சின்னத்திரை தொடர்களின் டிஆர்பியும் அதிகரிக்கிறது.
சிறகடிக்க ஆசை
இந்த வார டிஆர்பியில் அதிக புள்ளிகளைப் பெற்று, விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தில் உள்ளது. இத்தொடரில் நடிக்கும் நடிகர் வெற்றி வசந்த் - நடிகை கோமதியின் நடிப்பு, நடுத்தரக் குடும்பத்தைப் போன்று இயல்பாக இருப்பதால் இந்த ஜோடிக்கு ரசிகர்களும் அதிகம்.
சன் தொலைக்காட்சியின் தொடர்கள் முதல் மூன்று இடங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அவற்றை பின்னுக்குத்தள்ளி சிறகடிக்க ஆசை தொடர் முதலிடம் பிடித்துள்ளது. இத்தொடரை இயக்குநர் குமரன் இயக்குகிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரை இயக்கியவர் இவரே.
கயல்
2வது இடத்தில் கயல் தொடர் உள்ளது. கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் நீடித்து வந்தது. தற்போது சின்ன சறுக்கல் ஏற்பட்டுள்ளது. ரசிகர்களைக் கவரும் வகையில் எமோஷனலான காட்சிகள் அடங்கிய கயல் தொடர், பல விருதுகளையும் வென்றிருந்தது.
நடிகை சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் மீனா குமாரி, அபிநவ்யா, அவினாஷ் அசோக், முத்துராமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சுந்தரி
3வது இடத்தில் சுந்தரி தொடர் உள்ளது. சுந்தரி தொடரின் முதல் பாகத்தைப் போன்றே இரண்டாவது பாகமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திருமண சிக்கலுக்கு மத்தியில் போராடி மாவட்ட ஆட்சியரான சுந்தரி (கேப்ரியல்லா), தற்போது முன்பு இருந்ததை விட அதிக சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொடருக்கு விறுவிறுப்பு குறையவில்லை.
பாக்கியலட்சுமி
4வது இடத்தில் தொடர் உள்ளது. இந்தத் தொடர் கதையம்சப்படி பல்வேறு விமர்சனங்களை சந்தித்திருந்தாலும், மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றாக உள்ளது. பாக்கியலட்சுமி ஒளிபரப்பாகத் தொடங்கியது முதலே, விஜய் தொலைக்காட்சியில் குறிப்பிடும்படியான தொடர்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
5வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது. இந்தத் தொடரும் முதல் பாகத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாவது பாகமும் மக்களிடம் பிரபலமடைந்துள்ளது. அண்ணன் - தம்பிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்தொடர், தற்போது அப்பா - மகன்கள் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மகன்களைத் திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு வரும் 3 மருமகள்கள் மூலம் சுவாரசியம் அதிகரித்துள்ளது. இதனால், இத்தொடர் முதன்மை தொடர்களின் பட்டியலில் நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.