ஒரு வருடமாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் தர்ணா!

பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீர் தர்ணா போராட்டம்.
பென்னாகரம் அருகே பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தராமல் ஒரு வருடத்திற்கு மேலாக அலைக்கழித்த வருவாய் துறையினரைக் கண்டித்து பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
பென்னாகரம் அருகே பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தராமல் ஒரு வருடத்திற்கு மேலாக அலைக்கழித்த வருவாய் துறையினரைக் கண்டித்து பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
Published on
Updated on
1 min read

பென்னாகரம்: பென்னாகரம் அருகே கடந்த ஒரு வருடமாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாததைக் கண்டித்து 2 விவசாயிகள் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பென்னாகரம் அருகே பிலியனூர் ஊராட்சிக்கு உள்பட்ட கௌரி செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ராமன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 17 சென்ட் நிலம் வாங்கி, அதனை தனது பெயருக்கு பத்திரம் செய்துள்ளார். இதற்காக வருவாய் துறையிடம் நிலத்திற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்யக் கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் செய்துள்ளார்.

இந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட வருவாய்த்துறையினர், புதிதாக வாங்கப்பெற்ற நிலத்திற்கான பட்டாவில் மற்றொரு நபரின் பெயர் உள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதற்கான விசாரணை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்துள்ளது.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம், பலமுறை தெரிவித்து வந்ததாகவும், பட்டாவில் உள்ள நபர் குறித்து வருவாய்த்துறையினரும் விசாரணை மேற்கொண்டு, அந்த நபர் குறித்து முழுமையான விபரம் மற்றும் அவருக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என தெரிவித்து வந்த நிலையில், தற்போது வரை பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தராமல் கடந்த ஒரு வருடமாக அலைக்கழித்து வருவதாக தெரிவித்து பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு உயர்மின் கோபுர பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சங்க பகுதி ஒருங்கிணைப்பாளர் கே.ஜி.கருவூரான், விவசாயி ராமன் ஆகிய இருவரும் பதாகைகளை ஏந்தியவாறு மண்வெட்டியுடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வருவாய் துறையினர் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பட்டாவில் பெயர் மாற்றம் குறித்து முழுமையான விசாரணை முடிவுற்றது.

பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆணையில் அதிகாரிகள் கையொப்பமிடும் பணி மட்டும் உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் விவசாயிகள் அதனை ஏற்க மறுத்து, உடனடியாக அதற்கான ஆணையை வழங்க நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் கலைந்து செல்வதாக தெரிவித்து, தொடர்ந்து பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.