காதல் விவகாரத்தில் தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த தங்கையை அண்ணன் ஆணவக் கொலை செய்துள்ளார்.
பல்லடம் அருகே ஆணவக் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி வித்யா
பல்லடம் அருகே ஆணவக் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி வித்யா
Published on
Updated on
2 min read

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த தங்கையை அண்ணன் ஆணவக் கொலை செய்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் மனைவி தங்கமணி மகன் சரவணன் மற்றும் மகள் வித்யா உடன் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யா (22) கோவை அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். திருப்பூர் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த வெண்மணி என்பவரை வித்யா காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் விவரம் வீட்டிற்கு தெரியவந்த நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்களது வீட்டில் குடும்பத்தினருக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே வெண்மணியின் பெற்றோர்கள் வித்யா வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை சந்தித்து முறையாக பெண் கேட்ட நிலையில் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 30 ஆம் தேதி தண்டபாணி அவரது மனைவி தங்கமணி இருவரும் கோயிலுக்கு சென்றதாகவும், மகன் சரவணனும் வெளியே சென்ற நிலையில், திரும்பி வந்தபோது வீட்டில் தனியாக இருந்த வித்யா பீரோ விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து வித்யாவின் பெற்றோர் 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வித்யா பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் குடும்பத்தினர் வித்யாவின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து காதலியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காதலன் வெண்மணி அளித்த புகாரை அடுத்து பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை செய்ய வேண்டும் என காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பீரோ விழுந்ததால் வித்யாவின் தலையில் காயம் ஏற்பட்டதா? அல்லது தாக்கி கொலை செய்யப்பட்டாரா? என்பதை கண்டறிய பல்லடம் வட்டாட்சியர் சபரிகிரி தலைமையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் உதவியுடன் வித்யாவின் உடலை தோண்டி எடுத்து இடுகாட்டிலேயே வைத்து உடல்கூறாய்வு செய்தனர்.

இதில், வித்யா தலையில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது உடல் பாகங்களை சோதனைக்காக மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உடல்கூறாய்வு முடிந்த பின் வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும் அண்ணன் சரவணன் இருவரையும் விசாரணைக்காக காமநாயக்கன்பாளையம் போலீசார் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததை அண்ணன் சரவணன் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ், தங்கை வித்யாவிடம் காதலை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நன்றாக படிக்குமாறு அண்ணன் சரவணன் தெரிவித்து வந்ததாகவும் அதனால் அண்ணனுடன் கடந்த இரண்டு மாதமாக வித்யா பேசவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில், காதலை கைவிட்டு படிக்குமாறு தெரிவித்தபோது வித்யா மறுத்து பேசியதால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் சரவணன் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த வித்யா இறந்துள்ளார். சம்பத்தன்று பெற்றோர் வீட்டில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதில், இவர் மட்டும் தானா? மற்றும் பலரும் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆணவப் படுகொலை குறித்து விசாரித்த காவல்துறையினர் வித்யாவின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்துள்ளனர்.

அநாகரிகத்தின் உச்சமாக சாதியின் பெயரால் தொடர்ச்சியாக நடைபெறும் ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளிகள் வைக்கப்படுவது எப்போது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com