
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போர்ச்சுகல் தலைநகரிலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக, கடந்த ஏப்.6 அன்று இரவு தனி விமானம் மூலமாக போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் நகரத்துக்குச் சென்றடைந்தார்.
இந்நிலையில், இன்று (ஏப்.8) போர்ச்சுகல் நாடாளுமன்றத்தின் தலைவர் ஜோஸ் பெட்ரோ அகுயார் ப்ராங்கவை சந்தித்த குடியரசுத் தலைவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சர்வதேச அளவிலான பிரச்னைகள் குறித்தும் இரண்டு நாடுகளின் உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக குடியரசுத் தலைவரின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தலைநகர் லிஸ்பனிலுள்ள இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். பின்னர், அவர் அங்குள்ள ராதா-கிருஷ்ணர் கோயிலில் வழிபாடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெலோ டிசோவ்ஸாவின் அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்.
கடந்த 1998- ஆம் ஆண்டுக்கு முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணனின் பயணத்துக்கு பின் சுமார் 27 ஆண்டுகள் கழித்து இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் போர்ச்சுகல் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி