
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் தீவிரவாதியின் கூட்டாளி ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
சர்வதேச அளவில் தீவிரவாதியென அறிவிக்கப்பட்டவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மது எனும் தீவிரவாத இயக்கத்தின் நிறுவனருமான மௌலானா மசூத் அஸாரின் நெருங்கிய கூட்டாளியான காரி எயிஜாஸ் அபித் என்பவர் மீது தலைநகர் பெஷாவரில் கடந்த ஏப்.7 அன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.
பெஷாவரின் பிஸ்தகாரா பகுதியில் அரங்கேறிய இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (ஏப்.9) சிகிச்சை பலனின்றி பலியாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படுகாயமடைந்த அவரது கூட்டாளி காரி ஷாஹித் என்பவர் உயிருக்கு போராடி வருவதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் ஊடகங்களின் வெளியிடப்பட்ட செய்திகளில், கொலை செய்யப்பட்ட அபித் ஹலே-இ-சுன்னாஹ் வால் ஜமாத் என்ற அமைப்பின் உறுப்பினராகவும் சர்வதேச அளவிலான கத்ம்-இ-நபுவாத் அமைப்பின் மாகாணத் தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் இந்த அமைப்புகளின் மூலம் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆள் சேர்பில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் மதகுருக்களைக் குறிவைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆனால், இந்தத் தாக்குதல்களில் பலியானவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஜிதீன் மற்றும் ஜெய்ஷ்-இ-முஹம்மது ஆகிய தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களில் இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்களால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 2000-ம் ஆண்டு மௌலானா மசூத் அஸாரால் ஜெய்ஷ்-இ-முஹம்மது துவங்கப்பட்டதிலிருந்து ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் இந்த அமைப்பு பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் எப்படியிருக்கிறார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.