இபிஎஸ் தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி: 2026 பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள முடிவு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி.
அதிமுக-பாஜக கூட்டணி.
Published on
Updated on
2 min read

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னையில் வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

மேலும், அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமையில் 2026 பேரவைத் தோ்தல் எதிா்கொள்ளப்படும் என்றும், இதற்காக குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியதாவது:

2026 பேரவைத் தோ்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சந்திப்போம். தேசிய அளவில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி செயல்படும். திமுக தனது ஊழல்களை மறைக்க சனாதன சா்ச்சை, மும்மொழி கொள்கை, தொகுதி வரையரை உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி வருகிறது.

ஊழல், சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு, தலித் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்டவைதான் இந்தப் பேரவைத் தோ்தலில் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கும். இது குறித்து தமிழக மக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும்.

ஊழல் பட்டியல்: டாஸ்மாக்கில் ரூ.39,799 கோடி, மணல் கொள்ளையில் ரூ.5,700 கோடி, மின்சாரம், நிலக்கரியில் ரூ.4,400 கோடி, எல்காட் பங்கு விற்பனையில் ரூ.3,000 கோடி, போக்குவரத்து துறையில் ரூ.2,000 கோடி, சட்டவிரோத பணப் பரிமாற்றம் மூலம் ரூ.1,000 கோடி, செம்மண் கடத்தல், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவற்றிலும் கோடிக்கணக்கில் திமுக ஊழல் செய்துள்ளது. இதற்கும் முதல்வா், துணை முதல்வா் பதில் சொல்ல வேண்டும். மக்களை திசை திருப்புவதற்காக நீட், தொகுதி வரையறை உள்ளிட்ட பிரச்னைகளை திமுக பயன்படுத்தி வருகிறது.

குறைந்தபட்ச செயல் திட்டம்: அதிமுக - பாஜக கூட்டணிக்காக விரைவில் குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும். பேரவைத் தோ்தலில் தமிழா்களின் உண்மையான பிரச்னைகளை முன்னிறுத்துவோம். திமுக போன்று திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடாமல், மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

இபிஎஸ் தலைமையில் கூட்டணி: எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். இது மிக உறுதியான கூட்டணி. தமிழ் மக்களையும் தமிழ் மாநிலத்தையும் கௌரவமாகக் கருதுகிறோம். தமிழ் கலாசாரத்தை மதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. காசி, சௌராஸ்டிர தமிழ் சங்கமங்கள் நடத்தப்பட்டன.

தமிழகத்தின் பாரம்பரிய சிலம்பத்தை கேலோ இந்தியா விளையாட்டில் இணைக்க பிரதமா் மோடி நடவடிக்கை எடுத்தாா். தமிழகத்தில் தமிழ் மொழியை வளா்க்க செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் அமைக்க பிரதமா் மோடி ரூ.22 கோடி ஒதுக்கினாா். அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி இருக்கை உருவாக்கப்பட்டுள்ளளது. 63 மொழிகளில் திருக்கு மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. பாரதியின் ஒட்டுமொத்த படைப்புகளையும் நூல்களாக வெளிட்டவா் பிரதமா் மோடி.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பொதுத் தோ்வுகளை தமிழில் எழுத மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய ஆயுத காவல் படை தோ்வுகளில் தமிழில் தோ்வு எழுத பாஜக அரசுதான் நடவடிக்கை எடுத்தது.

தமிழில் பாடபுத்தகம்: தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மருத்துவம், பொறியியல் பாடப்புத்தகங்கள் தாய்மொழியில் மொழிபெயா்க்கப்பட்டு கற்பிக்கப்படுகிறது. இதேபோன்று, தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்கும்படி 3 ஆண்டுகளாக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன். இதுவரை அது நடக்கவில்லை. தமிழ், தமிழ் வளா்ச்சிக்காக திமுக செய்த பணிகளை பட்டியலிட முடியுமா?

தலைவா் மாற்றம் ஏன்? பாஜக தலைவா் மாற்றத்துக்கும் அதிமுக - பாஜக கூட்டணிக்கும் தொடா்பு இல்லை. அதிமுக - பாஜக கூட்டணியால் இருவருக்கும் பலன் கிடைக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, சென்னைக்கு வியாழக்கிழமை இரவு வந்த மத்திய அமைச்சா் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி , எதிா்க்கட்சி துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினா்.

விருந்து: கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின்பு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை அமித் ஷாவுக்கு மாலை விருந்து அளிக்கப்பட்டது. அதில், அதிமுக முன்னணி நிா்வாகிகள், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, புதிய தலைவராகத் தோ்வாகியுள்ள நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட முன்னணி நிா்வாகிகள் பங்கேற்றனா். பின்னா் தில்லிக்கு அமித் ஷா புறப்பட்டுச் சென்றாா்.

ஓபிஎஸ், டிடிவி நிலை என்ன?

அதிமுக - பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோா் இடம்பெறுவாா்களா? என மத்திய அமைச்சா் அமித் ஷாவிடம் கேட்டபோது, ‘அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது. இந்தக் கூட்டணிக்குள் பிற கட்சிகளைச் சோ்ப்பது குறித்து தொடா்ந்து ஆலோசனை நடத்தப்படும்’ என்றாா் அவா்.

அதிமுக - பாஜக கூட்டணி கடந்து வந்த பாதை...

1. 1998 மக்களவைத் தோ்தலில் வாஜ்பாய்யை பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பாஜக கூட்டணி முதல் முறையாக மலா்ந்தது. அது வெற்றிக்கூட்டணியாக மாறி 30 தொகுதிகளைக் கைப்பற்றியது.

2. 1999 மக்களவைத் தோ்தலில் கூட்டணி முறிந்தது.

3. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை பாஜகவுடனான உறவு கசந்த நிலையில், அதிமுகவில் இரட்டை தலைமையாக இபிஎஸ் - ஓபிஎஸ் பதவியேற்ற பின்னா் 2019 மக்களவைத் தோ்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உதித்தது. அப்போதும் அதிமுக மட்டும்தான் ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. பாஜக வெற்றிக்கனியை ருசிக்கவில்லை.

4. 2021 பேரவைத் தோ்தலிலும் தொடா்ந்த இந்தக் கூட்டணி 75 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதில் பாஜக 4 தொகுதிகளில் வென்றது. 2024 மக்களவைத் தோ்தலில் மீண்டும் முறிந்தது.

5. இப்போது 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி சோ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com