
திருநெல்வேலி: பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், அங்கு சட்டத்திற்கு விரோதமான ஆட்சி நடப்பதாக உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு குறித்து பேசும் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் குறித்து பேசாதது ஏன் என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் மறைந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் நினைவஞ்சலி கூடுகை பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரா.நாறும்பூநாதன் திருவுருவப் படத்திற்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு மலரஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சிக்கு பின்னர் பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 தீா்மானங்களை ஆளுநா் கிடப்பில் போட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தின் மூலம் நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது. இது தமிழக முதல்வரின் செயலுக்கு கிடைத்த வெற்றியாகும். தமிழகத்தில் சட்டத்தின் படி ஆட்சி நடப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.
உத்திரப்பிரதேசத்தில் சட்டத்திற்கு விரோதமான ஆட்சி நடக்கிறது என உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கூறியுள்ளார். அங்கு 10 ஆயிரம் பேர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றமே கூறுகிறது. இந்திய நாடு என்பது பன்முகத் தன்மை கொண்ட நாடு. ஜனநாயக நாட்டில் மக்களை ஒருங்கிணைப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம்தான். ஆகவே மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் , பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீட் தோ்வு விவகாரத்திலும் நல்லது நடக்கும்
உச்ச நீதிமன்றம் சென்று ஆளுநரின் அதிகாரம் இதுதான் என உணர்த்தும் வகையில் 10 மசோதாக்களை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார். அதேபோன்று நீட் தோ்வு விவகாரத்திலும் முதல்வர் நல்ல முடிவைப் பெற்றுத் தருவார். ஏற்கனவே மத்திய அரசின் கீழ் உள்ள ஜிம்பர் மருத்துவமனை, மகாத்மா காந்தி மருத்துவமனை போற்ற சில மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் விலக்கு இருப்பது போல் தமிழகத்திற்கும் நல்லது நடக்கும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.