உங்கள் உடலுக்கு என்ன தேவை என்று தெரியுமா? இளம்வயது உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?

நவீன உணவு முறையால் குழந்தைகள், இளம் வயதினரிடையே ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள் பற்றி...
உங்கள் உடலுக்கு என்ன தேவை என்று தெரியுமா? இளம்வயது உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?
ENS
Published on
Updated on
4 min read

சென்னையைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சமீபத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனையில் உடலில் கொழுப்பின் அளவு மற்றும் கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. மேலும் அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருந்தார். இரைப்பைப் பிரச்னைகளும் இருந்துள்ளன. ஒழுங்கான உணவு முறையின்மை, உடல் செயல்பாடு இன்றி அமர்ந்தே இருப்பது போன்ற நவீன வாழ்க்கை முறையால் தூக்கமின்மை மற்றும் பிற உடல்நலக் கோளாறுகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மருத்துவரின் அறிவுரைப்படி அவரது உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்ததுடன், கல்லீரல் பிரச்னைக்கும் சிகிச்சை அளித்த நிலையில் 3 முதல் 4 மாதங்களில் அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டதாக கொச்சியைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் மஞ்சு ஜார்ஜ் கூறினார்.

இளம்வயதில் உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?

"காலை உணவைத் தவிர்ப்பது, சர்க்கரை உணவுகளை அதிகம் உட்கொள்வது, இரவு உணவைத் தாமதமாக எடுத்துக்கொள்வது, நள்ளிரவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, இவற்றுடன் உடல் செயல்பாடு இல்லாதது உடல் எடையை அதிகரிக்கும்.இது கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவாகவும், புரதம் அதிகமாகவும் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அதிகமாக தண்ணீர் குடிப்பதுடன், உணவில் சர்க்கரை அளவை முடிந்தவரை குறைக்க வேண்டும். அதேபோல இரவு 8 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்" என்று டாக்டர் மஞ்சு பரிந்துரைக்கிறார்.

தற்போதைய காலகட்டத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளைத் தவிர்க்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம் என்றும் உணவுக் கட்டுப்பாடு முறையை கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

மேலும், ஊட்டச்சத்துக் குறைபாடும்(malnutrition) சரி, அதிக ஊட்டச்சத்தும்(overnutrition) சரி இந்த இரண்டினாலுமே உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் கூறுகிறார்.

2018 மார்ச் மாதம் லான்செட் குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட, இந்தியாவில் பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றிய ஆய்வில், 9 மாணவர்களில் ஒருவர் அதிக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பது, அதிகமாக இருப்பது, அத்தியாவசிய ஊட்டச்சத்துகளின் சமநிலைத் தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.

ENS

ஊட்டச்சத்துக் குறைபாடு

ஆஸ்டர் மெட்சிட்டியின் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் சஜனா, "குழந்தைகள் மற்றும் பதின்வயதினரிடையே தற்போது ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடங்கங்கள்தான் இதற்குக் காரணம். இதில் வரும் உணவு விளம்பரங்களைப் பார்த்து குழந்தைகள் கேட்கும்போது பெற்றோர்களும் வாங்கிக்கொடுக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

அதிகப்படியான ஊட்டச்சத்து

"அதேபோல சில குழந்தைகளுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்து இருக்கும்போது முதலில் இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும். இதனால் உடலில் ரத்த சர்க்கரை அளவில் மாறுபாடு ஏற்பட்டு நீரிழிவு நோய், கல்லீரல் கொழுப்பு, பிசிஓஎஸ் மற்றும் சில உடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். குழந்தைகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், அதிக கலோரி கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. குழந்தைகளிடையே இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்போது உடனடியாக உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி பிரச்னையை சரிசெய்ய வேண்டும்" என கொச்சியைச் சேர்ந்த ஊட்டச்சத்து மருத்துவர் டாக்டர் நிவேதிதா கூறினார்.

அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இல்லாதது

மேலும் சிலருக்கு உடலில் இரும்புச்சத்து, வைட்டமின் டி என அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இல்லாமல் இருக்கும். உடலுக்குத் தேவையான முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், நுண்ணிய ஊட்டச்சத்துகள் கிடைக்காதபோது உடல் செயல்பாடுகள் சரியாக இருக்காது. அதாவது பசிக்காக கொஞ்சமும் ஊட்டச்சத்து இல்லாத நொறுக்குத்தீனிகள், துரித உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடும்போது ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுகளை அளவாக எடுத்துக்கொள்வது, லேசான உடற்பயிற்சி என சரியான வாழ்க்கைமுறையைப் பின்பற்றும்போது குழந்தைகளிடையே மற்றும் இளம்வயதில் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்கலாம்.

காரணங்கள் என்ன?

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 முதல் 3 மடங்கு அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அதிகமாக கொழுப்பு, உப்பு, சர்க்கரை எடுத்துக்கொள்வதுதான் என்றும் கூறப்பட்டுள்ளது.

ENS

அதாவது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஸ்நாக்ஸ் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மிகுந்த பானங்கள், பாஸ்ட் ஃபுட் எனும் துரித உணவுகள், ஜங்க் ஃபுட் எனும் பொருந்தா உணவுகள்தான் இந்த உடல் பருமன் மற்றும் அதுசார்ந்த நோய்களுக்குக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

"குறிப்பாக இந்த உணவுப் பழக்கவழக்கம் குழந்தைகளிடையே உடல் பருமனை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி ஹார்மோன் சமநிலையைக் குலைத்து ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மேலும் ஹோட்டல்கள், ஸ்நாக்ஸ் கடைகள் அதிகரித்துவிட்டதால் குழந்தைகள் சாப்பிடுவதைத் தடுக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. அதுவே பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவைப் பெறுவதில் சிக்கல் இருக்கிறது. சில தாய்மார்களின் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளும் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பாதிக்கிறது. அதனால் சத்தான உணவு, நல்ல தூக்கம், விளையாட்டு அல்லது உடற்பயிற்சி, டிவி அல்லது சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகியவை அவசியம் தேவை, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, கவனம் செலுத்தும் திறனை அதிகரிப்பது, கல்வியில் சிறந்து விளங்குவதற்கு உதவும்" என டாக்டர் சஜனா கூறுகிறார்.

நோவா உணவு வகைப்பாடு

நோவா உணவு வகைப்பாடு என்பது உணவுப் பொருள்களை பதப்படுத்தும் நிலைகளைக் கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

பதப்படுத்தப்படாத அல்லது குறைந்தபட்ச பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

காய்கறிகள், பழங்கள், இறைச்சி, பருப்பு வகைகள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு அப்படியே பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட சமையல் பொருள்கள்: எண்ணெய்கள், கொழுப்பு பொருள்கள், உப்பு, சர்க்கரை மற்றும் மசாலாப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்: கொழுப்பு, இனிப்பு, காரம், உப்பு நிறைந்த பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், சமைத்து பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இறைச்சி, மீன், பிஸ்கட்கள் பீட்சா, பாஸ்தா உணவுகள், ஐஸ்கிரீம்கள், இனிப்பு வகைகள், சுவையூட்டப்பட்ட தயிர், ஆற்றலை அளிக்கும் குளிர்பானங்கள் ஆகியவை. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்: இதில் உணவுகளை தயாரித்து அவை நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும் வகையில் அதில் மேலும் சில பதப்படுத்தும் பொருள்கள் (பிரிசர்வேட்டிவ்ஸ்), நிறமூட்டிகள், சர்க்கரை, சோடியம் ஆகியவை சேர்க்கப்படும். இது மோசமான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

என்ன செய்யலாம்?

முடிந்தபோதெல்லாம் வீட்டில் சமைத்த உணவை உட்கொள்வது.

உணவகங்களிலிருந்து அல்லது ஆன்லைன் மூலமாக உணவு ஆர்டர் செய்வதைக் குறைப்பது.

பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் என சத்தான சரிவிகித உணவை தினமும் உட்கொள்வது.

குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடுவதை ஊக்குவிப்பது.

வீட்டிலேயே குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் தயாரித்துக் கொடுப்பது.

குழந்தையின் 4-5 வயதுக்குள் எந்த உணவு ஆரோக்கியமானது, எது ஆரோக்கியமானது அல்ல என்பதை கற்றுக்கொடுப்பது.

பெற்றோர்களும் குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்களில் முக்கிய பங்காற்றுகின்றனர். பெற்றோர்கள் சாப்பிடும் உணவுகளைப் பார்த்தே குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். எனவே, பெற்றோர்களும் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து வீட்டில் சத்தான உணவுகளைச் சாப்பிடும்போது குழந்தைகளும் தானாகவே பழகிக்கொள்வார்கள்.

உணவு கலாசாரம், வாழ்க்கைமுறை மாற்றத்தின் காரணமாக பல உடல் நலப் பிரச்னைகளை இளம்வயதிலே எதிர்கொள்ளும் நிலை அதிகமாகி வரும் இந்த சூழலில், பாதிப்பைத் தவிர்க்க வேண்டுமானால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவரவர் தேவை...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com