
திருத்தணி: திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்நாதன். கடந்த 2 வாரங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில், 14 ஆம் நாள் காரியத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஜெகன்நாதன் உறவினர்களான ஸ்டாலின்(40), சம்பத்குமார்(38), கண்ணகி(50) ஆகியோர் காரில் நல்லாட்டூர் கிராமத்திற்கு வந்தனர். காரை கார்த்திக் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
காரியத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஓசூர் செல்வதற்காக காரில் மேற்கண்ட 4 பேரும் திருத்தணி - சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆர்.கே.பேட்டை ஒன்றியம் எஸ்.வி.ஜி.புரம் கிராமம் அருகே கார் சென்றுகொண்டிருந்த போது தனியார் எக்ஸ்போர்ட் அருகே சாலையோரம் இருந்த புளிய மரம் மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஸ்டாலின், சம்பத்குமார், கண்ணகி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கார் ஓட்டுநர் கார்த்திக் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் கிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த வந்த திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் மற்றும் ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் போலீஸார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.