
ரிப்பன் மாளிகை அருகே 13 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு தவெக, விசிக கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் கடந்த 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் தேன்மொழி என்பவா் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், இந்தப் போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தப் போராட்டத்தை சட்டவிரோதம் என அறிவித்து தூய்மைப் பணியாளா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், போராட்டத்தைக் கைவிட்டு இடத்தை காலி செய்யும்படி உத்தரவிட்ட பிறகும் அவா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த போராட்டத்துக்கு உரிய அனுமதியும் அவா்கள் பெறவில்லை என்று வாதிட்டாா்.
தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சங்கரசுப்பு, ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அவா்கள் அங்கு பணியாற்றுபவா்கள். போராட்டம் தொடா்பாக இரண்டு நாள்களில் சுமுகத்தீா்வு காணப்படும் என அமைச்சா் கூறியுள்ளாா். எனவே, போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தக் கூடாது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், போராட்டம் என்ற பெயரில் நடைபாதையை மறைத்து யாரும் போராடக் கூடாது. அதேநேரம் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உழைப்போா் உரிமை இயக்கம் அனுமதி கோரினால் அதை சட்டப்படி பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும். நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த போலீஸாா் யாரையும் அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.
இரவோடு இரவாக கைது
இந்நிலையில், ரிப்பன் மாளிகை அருகே 13 ஆவது நாளாக தொடர் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், திடீரென அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இதனிடையே அவர்களுக்கு ஆதரவாக பலர் திரண்டனர்.
குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது
இந்நிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக குவிந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை புதன்கிழமை நள்ளிரவில் பெண்கள் என்றும் பாராமல் குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு போர்களம் போல் காட்சியளித்ததால் பரபரப்பு நிலவியது. போலீஸாரின் நடவடிக்கையால் சிலர் மயக்கம் அடைந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அரசுப் பேருந்துகள் மற்றும் காவல்துறை வாகனங்களில் ஏற்றப்பட்டு பல்வேறு இடங்களில் உள்ள சமூக கூடங்களில் வைக்கப்பட்டனர். வேளச்சேரி அம்மா மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி, அங்கி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.
தீவிர கண்காணிப்பு
இதற்கிடையே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ரிப்பன் மாளிகை பகுதியில் மாநகர காவல் ஆணையர் அருண் ஆய்வு செய்தார். இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என கையெழுத்திட்டால் விடுதலை
இந்நிலையில், சமூக கூடங்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் வியாழக்கிழமை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இனி எந்த இடத்திலும் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டால் மட்டுமே இங்கு இருந்து விடுவிக்கப்படுவீர்கள் என போலீசார் மிரட்டல் விடுத்து வருவதாக மனக்குமுறலுடன் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தவெக, விசிக கண்டனம்
தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய், விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sanitation workers who had been engaged in a continuous protest for the 13th day near the Ripon Building were bombed and arrested overnight.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.