
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து கொடிப்பட்டம் வெள்ளிப்பல்லக்கில் வைக்கப்பட்டு 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டது. பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் பாட, வாண வேடிக்கையுடன் 5.17 மணிக்கு கோயில் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புகட்டிய சிவகுகநாதன் பட்டர் கொடியேற்றினார்.
பின்னர், கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.40 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேதகபாராயணமும், கோயில் ஓதுவார்கள் திருமுறைப் பாராயணமும் பாடினர்.
இதில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள், கோயில் இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன், திருக்கோயில் பணியாளர்கள், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் செங்குலி ரமேஷ், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ரா.அருள்முருகன், இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.