
வாடிப்பட்டி: எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை எனவும், சினிமாவில் 100 பேரை அடிக்கும் விஜய் நேரில் அடிக்க முடியுமா என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே துவரிமான் கிராமத்தில் ஆர்.ஜே.தமிழ் மணி அறக்கட்டளை சார்பாக இலவச மருத்துவ முகாமை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், அமலாக்கத்துறை சோதனையை மறைக்க முதல்வர் எங்கள் மீது குறை சொல்வார், அவதூறு பேசுவார். அமைச்சர் வீட்டிலே அமலாக்கத்துறை சோதனை நடப்பது வருந்தக்கூடியது. மடியில் கனம் இல்லையென்றால் அமலாக்கத்துறை சோதனைக்கு ஏன் பயப்பட வேண்டும்.
2ஜி அலைக்கற்றை ஊழலின் போது காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்ததுதான் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தது.
ஆனால் அதிமுக யாரை கண்டும், எந்த சோதனையை கண்டும் பயந்தது இல்லை. அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது, வழக்குப் போடப்பட்டது. ஆனால் எங்களுக்கே பயமே கிடையாது.
திக்கு தெரியாத காட்டில் சிக்கிய திருமாவளவன்
தற்போது திக்கு தெரியாத காட்டில் சிக்கியது போல திமுகவில் திருமாவளவன் சிக்கிவிட்டார். இப்போதெல்லாம் திருமாவளவன் முன்னுக்கு பின் முரணாகவே பேசி வருகிறார். திமுக கூட்டணியில் இருக்கும் போது எங்களை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனால்,ஜெயலலிதாவை பல மடங்கு புகழ்ந்து பேசிய திருமாவளவன், தற்போது குறைத்து பேசிய வேண்டிய அவசியம் ஏன்?, திருமாவளவனுக்கு ஏதாதுவது ஆகிவிட்டதா என தெரியவில்லை. மதுரையில் நடைபெறும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவாக இருப்போம்.
யார் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பும் இல்லை
எந்த பெரிய நடிகர் மாநாடு நடத்தினாலும் கட்சி நடத்தினாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கமலஹாசன் கட்சி தொடங்கினார் ஆனால் இப்போது காணாமல் போய்விட்டார். விஷால் கூட கட்சி தொடங்குவதாக தெரிவித்தார். எத்தனை நடிகர் கட்சி தொடங்கினாலும் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை.
விஜய் மற்ற நடிகர்கள் கட்சி தொடங்கியதை போல நினைக்க முடியுமா என்ற கேள்விக்கு, நடிகர்களுக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது.
எம்ஜியாருடன் நடிகர் விஜயை ஒப்பிடுவது தவறு
சினிமாவில் நூறு பேரை அடிக்கும் விஜய், துப்பாக்கியை வைத்து சுடுகிறார். சாகசம் செய்கிறார். ஆனால் நடைமுறையில் இதெல்லாம் நடக்குமா? ரசிகர் கூட்டம் என்பது வேறு? அவர் மக்களுக்கு என்ன சேவை செய்திருக்கிறார். அவரது வரலாறு என்ன எம்ஜியாருடன் நடிகர் விஜயை ஒப்பிடுவது தவறு என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.