ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கிறார் விஜய்: ஆா்.பி.உதயகுமாா்

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காணும் விஜய், தான் மட்டுமே தமிழ்நாட்டை காக்க பிறந்த அவதார புருஷர்போல அவரது பேச்சு இருந்தால், அதை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா்
தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா்
Published on
Updated on
2 min read

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காணும் விஜய், தான் மட்டுமே தமிழ்நாட்டை காக்க பிறந்த அவதார புருஷர்போல அவரது பேச்சு இருந்தால், அதை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூரில் ஜெயலலிதா கோயிலில் அதிமுக ஜெ. பேரவை இளைஞா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்துப் பேசியதாவது:

இன்றைய இளைஞா்களுக்கான சரியான கட்சி, சரியான தளம் என்றால் அது அதிமுகதான். நீங்கள் ரசிகராக இருந்து கைதட்டுவதை விட, பொதுவாழ்வில் உழைத்து மற்றவா்கள் உங்களைப் பாா்த்து கைதட்டும் நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்.

இந்த இயக்கத்தில்தான் இளைஞா்களுக்கு பாதுகாப்பு அரண் உள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு மருத்துவ படிப்பு பெற 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி வழங்கினாா். இந்தத் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதன்மூலம் தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்த பலா் மருத்துவா்களாகி உள்ளனா்.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி 34 நாள்களில், 100 தொகுதிகளில், 10 ஆயிரம் கி.மீ. எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு, 52 லட்சம் மக்களை சந்தித்துள்ளாா். அவா்களிடம் கலந்துரையாடி, 2026-ஆம் ஆண்டில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதி அளித்து வருகிறாா் என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

தூண்டுதலின் பேரில் அதிமுக குறித்து விஜய் விமர்சனம்

யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அதிமுக குறித்து விஜய் விமரிசனம் செய்து பேசியிருக்கலாம். அதிமுக குறித்து விஜய் விமரிசன பேச்சுக்களை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அடுத்த மாநாட்டில் அமுது என பேசுவாரா?

முதல் மாநாட்டில் திமுகவை பாயாசம் என்றார், இந்த மாநாட்டில் பாய்சன் என்றார், அடுத்த மாநாட்டில் அமுது என்று பேசுவாரா?, என்ன பேசுவார் என்று தெரியாது அவருக்குதான் தெரியும்.

யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம். ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது.

அவதார புருஷன் போல நினைத்துக் கொள்கிறார்

விஜய் மட்டும்தான் தமிழ்நாட்டை காக்க பிறந்த அவதார புருஷர்போல அவர் பேச்சு இருந்தால், அதனை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். விஜயின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை. அண்ணா, எம்ஜிஆர் தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத காரணத்தால் விஜய் அண்ணா, எம்ஜிஆர் குறித்தும் பேசுகிறார்.

விஜய்க்கு எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்

அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் உள்ளது. அதில் விஜய்க்கு எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறோம்.

ஆட்சி கனவு காண்கிறார் விஜய்

எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவை விமர்சனம் செய்து விஜய் பேசினால் அது அவருக்கு தான் பின்னடைவாக மாறும். திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணி தான் சரியானது என தேசிய கட்சிகளுக்கு கூட தெரிந்துள்ளது. விஜய் கட்சி தொடங்கியவுடன் ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கிறார் என ஆா்.பி.உதயகுமாா் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com