
திருவள்ளூர்: தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காத மத்திய பாஜக அரசை கண்டித்து மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், திருவள்ளூரில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை வளாகத்தில் திஷாக்குழு பார்வையாளர்கள் கூடமான ராஜீவ் பவனில் செய்தியாளர்களுடன் அவர் கூறியதாவது:
இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமாக கல்வி நிதியை நிறுத்தி வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய எஸ்எஸ்ஏ நிதியை விடுவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வேன்.
சுதந்திர காலத்தில் இருந்து அறவழி போராட்டத்தை முன்னெடுத்து போராடி சுதந்திரம் பெற்று தந்த காங்கிரஸ் பேரியக்கத்திற்கே உரிய அறவழியில் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட போராட்டம் அல்ல, அரசியல் வற்புறுத்தல் மற்றும் மொழி திணிப்பு இல்லாமல், கல்விக்கு சமமான உரிமையை பெற வேண்டிய தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கான போராட்டமாகும். தனிமனித உரிமைகளை பறிக்க நினைக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து இப்போது நாம் போராடவில்லை என்றால் நம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
மேலும், நாட்டிலேயே கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் கல்வி முறையை பாஜகவின் அற்பத்தனமான அரசியல் காரணங்களுக்காக அழிக்க நினைப்பது நியாயமில்லை.
எனவே அனைத்து ஜனநாயக சக்திகள், சமூக நீதி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மக்கள் இந்தப் போராட்டத்தில் இணையுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.
கல்வி என்பது பேரம் பேசும் பொருள் அல்ல - இது கல்வி உரிமைச் சட்டத்தின் கீழான ஒரு அரசியலமைப்பு உரிமை, மேலும் எந்த அரசாங்கமும் அரசியல் ஆதாயத்திற்காக இதை மறுக்க முடியாது.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நேரிலும் கேட்டுள்ளேன். அதேபோல் மக்களவை கூட்டத்திலும் மசோதா கொண்டு வந்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார். .
அப்போது உடன் மக்களவை தொகுதி பொறுப்பாளர், முன்னாள் மாவட்ட தலைவருமான ஏ.சி.சிதம்பரம், நிர்வாகி வெங்கடேசன் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.