

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் பிரசித்தி பெற்ற காா்த்திகை தீப திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமா்சையாக நடந்து வருகிறது.
கோயிலில் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலா் அலங்காரங்களால் கைலாயம் போல் காட்சி அளிக்கிறது. மகா தீபத் திருவிழாவை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருவதால் நகரம் முழுவதும் விழா கோலமாக காணப்படுகிறது.
9 நாள்கள் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளின் மாவட வீதிவுலா நடைபெற்றது. பத்தாம் நாளான இன்று புதன்கிழமை(டிச.3) அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேதம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையாா் கருவறை எதிரில் ஏகன் அனேகன், அனேகன் ஏகன்' என்னும் தத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு மடக்கிலிருந்து ஐந்து மடங்குகளுக்கு தீபம் ஏற்றப்பட்டு அதில் இருந்து ஒரு மடக்கில் பரணி தீபம் ஏற்பட்டது. அதன்பின்னர் கருவறையில் ஏற்பட்ட பரணி தீபத்தை எடுத்துச்சென்று, கோயிலில் உள்ள விநாயகர், அம்மன், முருகர் உள்ள சன்னதிகளில் சிவாச்சாரியர்கள் பரணி தீபம் ஏற்றினர்.
இதில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷம் முழங்க பரணி தீபத்தை வழிபட்டனர்.
அதனைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது ஆண்டுக்கு ஒரு முறை சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அா்த்தநாரீஸ்வரா் ஆனந்த தாண்டவம் ஆடியபடி மூன்றாம் பிரகாரத்தில் பக்தா்களுக்கு காட்சி தருவாா். மாலை கோயிலில் இருந்து மகா தீபத்தையும் அா்த்தநாரீஸ்வரா் ஆலயம் தரிசனம் செய்வதற்கும் இடவசதிக்கு ஏற்றவாறு பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுவதால் இந்த ஆண்டு மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வல்லுநா் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தீபத் திருவிழாவின் போது மலை ஏற பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.