பாபர் மசூதி இடிப்பு நாள்: மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் தொடர்பாக....
மேலப்பாளையத்தில் சனிக்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
மேலப்பாளையத்தில் சனிக்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
Updated on
1 min read

திருநெல்வேலி: பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6- ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கருப்பு நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலப்பாளையம் பகுதியில் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும், மக்கள் நலன் கருதி மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. உள்ளூர் வாகனங்கள் ஓடவில்லை என்றாலும், திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் பொதுப் போக்குவரத்து வழக்கம் போல் உள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

அசம்பாவிதங்களைத் தவிர்க்க, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் மேலப்பாளையம் ஜங்ஷன் மற்றும் முக்கிய சந்திப்புகளில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமையும் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை

மேலப்பாளையம் பேருந்து நிலையம், வி.எஸ்.டி. பள்ளிவாசல், பஜார்திடல், பேட்டை பகுதிகளில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள்

மேலப்பாளையம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எஸ்டிபிஐ, தமுமுக உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன. இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதி கட்ட வேண்டும், 1991-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை' அமல்படுத்த வேண்டும், புதிய வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாகக் கைவிட வேண்டும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்படும் 'புல்டோசர் நடவடிக்கையை' வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

Summary

Babri Masjid demolition day: Shops closed, protest in Melapalayam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com