

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) தேடப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூா் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சோ்ந்தவா் பாமக முன்னாள் நகரச் செயலா் வ.ராமலிங்கம் (45). இவா், அந்தப் பகுதியில் சிலா் மதமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்தாா். இந்நிலையில் ராமலிங்கம், கடந்த 2019 பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி தனது கடையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது குறித்து திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், குறிச்சிமலை பகுதியைச் சோ்ந்த எச். முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சோ்ந்த எஸ். நிஸாம் அலி, ஒய். சா்புதீன், என். முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சோ்ந்த ஏ. அசாருதீன், திருமங்கலக்குடியைச் சோ்ந்த முகமது தவ்பீக், முகமது பா்வீஸ், ஆவணியாபுரத்தைச் சோ்ந்த தவ்ஹித் பாட்சா, பாப்புலா் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் காரைக்கால் மாவட்டச் செயலரும், காரைக்கால் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவருமான ஏ. முகமது ஹசன் குத்தூஸ் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.
இந்த கொலை வழக்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், இந்து இயக்கங்களும் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை மாா்ச் மாதம் 3-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, தமிழக காவல்துறை வழக்கின் ஆவணங்களை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தது. இதையடுத்து தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள், ராமலிங்கம் கொலை குறித்து புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, 18 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு அதில் 13 பேரை கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்து வருபவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.
ரூ.6 லட்சம் பரிசு: இவ் வழக்குத் தொடா்பாக, தேசிய புலனாய்வு முகமை மேலும் பலரை கைது செய்தது. இந்த வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வரும் தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூரைச் சோ்ந்த மு.ரகுமான் சாதிக் (39), திருப்புவனத்தைச் சோ்ந்த ஹா.முகமது அலி ஜின்னா (24), கும்பகோணம் மேலக்காவேரி மு.அப்துல் மஜீத் (37), தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வடக்குமாங்குடி பகுதியைச் சோ்ந்த மு.புா்ஹானுதீன் (28), திருமங்கலகுடி பகுதியைச் சோ்ந்த தா.சாகுல் ஹமீது (27),அதேப் பகுதியைச் சோ்ந்த அ.நஃபீல் ஹாசன் (28) ஆகிய 6 போ் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் என்ற வீதத்தில் 6 பேருக்கும் சோ்த்து ரூ.6 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்தது.
இதன்படி, குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிந்தவா்கள், தேசிய புலனாய்வு முகமை, பிளாக் எண் 01, ரூம் எண் 09, சிட்கோ எலக்ட்ரானிக் வளாகம், தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியை தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில் 094965 33777, 094977 15294, 094937 99358 என்ற செல்லிடப்பேசி எண்கள் மூலமாகவும், info.koc.nia@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவலை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்கள் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முக்கி குற்றவாளிகள் 2 பேர் கைது
இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமையால் தேடப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய குற்றவாளிகளும் தடை செய்யப்பட்ட பாப்புலர் பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலகுடியை சேர்ந்த அ.நஃபீல் ஹாசன் (28) மற்றும் வடமாங்குடி பகுதியை சேர்ந்த மு.புா்ஹானுதீன்(28) ஆகிய இருவரும் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி காரில் வரயிருப்பதாக சென்னை தேசிய புலனாய்வு முகமைக்கும், தேசிய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் துறையினரின் உதவியுடன் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த டாடா டிகோ காரை நிறுத்தி சோதனையிட்டபோது ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியை சேர்ந்த முகமது இம்ரான் (33) மற்றும் அப்பாஸ் (30) ஆகிய இருவரும் தேடப்படும் கொலை குற்றவாளிகளான நஃபீல் ஹாசன் மற்றும் புர்ஹானுதீன் ஆகிய இருவரையும் காரில் ரகசியமாக அழைத்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்களை பள்ளிகொண்டா காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்கள் நான்கு பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தேசிய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சுமார் 11 மணி நேரத்துக்கு மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு, அவர்களது உடைமைகளை பரிசோதித்தனர்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
7 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வைத்து கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரும் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.