வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சேர்த்த வழக்கு: ஊராட்சி செயலர் வீட்டில் சோதனை

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் வீடு, மண்டபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை தொடர்பாக...
கைது செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன்
கைது செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன்
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் வீடு, திருமண மண்டபம், பண்ணை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். இவர் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார்.

2019 - 2023 காலகட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி செயலராக பதவி வகித்தார். அப்போது படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி செயலர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.

அந்த காலகட்டத்தில் தங்கபாண்டியன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு தங்கப்பாண்டியன் வீடு, திருமண மண்டபம், வணிக வளாகம், பண்ணை வீடு, தோட்டம் ஆகியவற்றை விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு செய்து, மதிப்பீடு செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவரும் தங்கப்பாண்டியன் வீடு.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவரும் தங்கப்பாண்டியன் வீடு.

இதனையடுத்து புதன்கிழமை(டிச.10) தங்கப்பாண்டியன் மற்றும் அவரது மனைவி காசியம்மாள் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஆய்வாளர் ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்கபாண்டியனுக்கு சொந்தமான வீடு, திருமண மண்டபம், பண்ணைத் தோட்டம் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு வழக்கில் கைது:

இந்நிலையில், வன்னியம்பட்டி ஊர் சமுதாய தலைவர் தேர்வில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்த புகாரில் தங்கபாண்டியன் உள்பட 4 பேரை வன்னியம்பட்டி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Summary

Case of accumulating assets worth Rs. 1.10 crore disproportionate to income: Raid at the house of the panchayat secretary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com