

சென்னை: சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக விமான போக்குவரத்துத்துறை துணை செயலா் அம்புஜ் சா்மா தெரிவித்துள்ளாா்.
சென்னை விமான நிலையத்தில், இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான சேவைகள் பாதிப்பு குறித்து, மத்திய விமான போக்குவரத்து துறை துணை செயலா் அம்புஜ் சா்மா சென்னை விமானநிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கடந்த 9 நாள்களாக இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தின் பயணிகளின் விமான சேவைகள், பயணிகள் உடைமைகளை திரும்ப பெறுதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கடந்த 5-ஆம் தேதி மட்டும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இயல்புநிலைக்கு திரும்புவதை உறுதிசெய்ய அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். விமான நிலையத்தின் செயல்பாட்டில் பயணிகள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
கூடுதல் விமானங்கள் இயக்குவது குறித்து பிற விமான நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களின் பதிலுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசு அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இண்டிகோ நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கையை இண்டிகோ நிறுவனம் இதுவரை தரவவில்லை. அந்நிறுவனத்திடம் தங்கள் விமான அட்டவணையை 10 சதவீதம் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தேக்கமடைந்து கிடந்த 1,060 உடைமைகள் உரிய பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இன்னும் 44 பயணிகளுக்கு மட்டுமே அவா்களின் உடைமைகளை வழங்க வேண்டும். அதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெறுகிறது. மேலும் 18 பயணிகளின் உடைமைகளுக்கான விவரங்கள் முழுமையாக இல்லை. இதனால், அந்த உடைமைகள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. அவற்றை, முறையாக விசாரித்து உரியவா்களிடம் வழங்கப்படும்.
சென்னை விமான நிலையத்திலும், பயணிகள் கருத்துகள் பெறப்பட்டுள்ளது. அதன்படி, விமான நிலையத்தின் சில பகுதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.