

சென்னை: "14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025" இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜெர்மனி அணிக்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்திய 14 ஆவது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜெர்மனி அணியின் வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்கப்பதக்கம் அணிவித்து உலகக் கோப்பையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மேலும் இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த ஸ்பெயின் அணியின் வீரர்களுக்கு வெள்ளிப்பதக்கத்தையும், மூன்றாம் இடம் பிடித்த இந்திய அணியின் வீரர்களுக்கு வெண்கலப் பதக்கத்தையும் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக உருவாக்கிடும் வகையில் பல்வேறு சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்தி வருகின்றார். அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் சென்னையில் “ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னை – 2023” போட்டியை நடத்தினார். தொடர்ந்து 14 ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியை தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பினை பெற்ற முதல்வர் நவ.5 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் போட்டிக்கான வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டிச.10 ஆம் தேதி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் 14 ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை
போட்டியின் ”காங்கேயன்” சின்னத்தினை அறிமுகப்படுத்தியதுடன், இந்த போட்டிக்காக ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் பார்வையாளர் மாடம் ஆகியவற்றுடன் புதுப்பிக்கப்பட்ட மதுரை சர்வதேச ஹாக்கி விளையாட்டரங்கத்தை நவ.22 ஆம் தேதி திறந்து வைத்தார்.
"14-ஆவது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025" போட்டி நவம்பர் 28 ஆம் தேதி முதல் டிச.10 ஆம் தேதி வரை சென்னை, மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரை சர்வதேச ஹாக்கி விளையாட்டரங்கத்திலும் நடைபெற்றது. ஹாக்கி இந்தியாவுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய இப்போட்டியில், இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான், ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட 24 நாடுகள் பங்கேற்றன.
மதுரையில் நடைபெற்ற ஹாக்கி போட்டிகளில் கலந்து கொண்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஹாக்கி வீரர்கள் தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் வகையில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டதுடன், அவர்கள் மதுரையில் தமிழ்மக்களின் விருந்தோம்பலிலும், உபசரிப்பிலும் திளைத்து நீங்கா நினைவுகளை பெற்றனர்.
இன்று ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கிடையே சென்னை, எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில், நடைபெற்ற "ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை" யின் இறுதிப் போட்டியினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜெர்மனி அணி வீரர்களுக்கு தங்கப்பதக்கம் அணிவித்து உலகக் கோப்பையை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த ஸ்பெயின் அணியின் வீரர்களுக்கு வெள்ளிப்பதக்கத்தையும், மூன்றாம் இடம் பிடித்த இந்திய அணியின் வீரர்களுக்கு வெண்கலப் பதக்கத்தையும் துணை முதலல்வர் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த பரிசளிப்பு விழாவில் பிகார் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் செல்வி ஸ்ரேயாஸி சிங், சட்டப்பேரவை உறுப்பினர் இ.பரந்தாமன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, சர்வதேச
ஹாக்கி சம்மேளனத் தலைவர் டத்தோ தயாப் இக்ரம், இந்திய ஹாக்கி சங்கத் தலைவர் திலீப் திர்கி, செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் சேகர் ஜெ.மனோகரன், இயக்குநர் (பொது) கமாண்டர் ஆர்.கே. ஸ்ரீவத்சவா, ஹாக்கி சங்க நிர்வாகிகள், ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.