

தன்பாத்: பிளவுபட்ட உலகக் கூட்டணிகளுக்கு மத்தியில், இந்தியா தனது சொந்த வளா்ச்சிப் பாதையை தாமே வகுக்க வேண்டும் என்று அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானி வலியுறுத்தியுள்ளாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின்(ஐஎஸ்எம்) கல்வி நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில் கௌதம் அதானி பங்கேற்று பேசியதாவது:
தன்பாத் ஐஐடி (ஐஎஸ்எம்) நிறுவனமே ஒரு தேசிய தொலைநோக்குப் பார்வையிலிருந்து பிறந்ததாக குறிப்பிட்ட அதானி, 21-ஆம் நூற்றாண்டில் நாட்டின் இறையாண்மை என்பது, அதன் இயற்கை வளங்கள் மற்றும் எரிசக்தி அமைப்புகள் மீதான ஆதிக்கத்தைப் பொருத்தே அமையும்.
இந்தியாவின் முக்கிய திறன் மேம்பாட்டுக்காக ஆங்கிலேயா் ஆட்சியின்போதே, சுரங்கம் மற்றும் புவியியல் துறைக்கான கல்வி நிறுவனத்தை அமைக்க இந்திய தேசிய காங்கிரஸ் பரிந்துரைத்த தொலைநோக்கு பாா்வையின் பலனாகவே இந்தக் கல்வி நிறுவனம் பிறந்தது. இது, ஒரு தேசம் தனது சொந்த மண்ணின் வலிமையில் தேர்ச்சி பெறாமல் உயர முடியாது என்ற ஆழமான நாகரிகப் புரிதலைப் பிரதிபலித்தது.
இந்நிறுவனத்தில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊதியத்துடன் கூடிய பயிற்சி வாய்ப்புகளை அளிப்பதற்காக, சுரங்கத் திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பக்தியார் கில்ஜி நாளந்தாவைப் எரித்தபோது, அவரது நோக்கம் கட்டடங்களை அழிப்பதோ அல்லது கையெழுத்துப் பிரதிகளை எரிப்பதோ மட்டுமல்ல என்றும் "அவரது உண்மையான இலக்கு நமது நாகரிக நம்பிக்கை, நமது அறிவு அமைப்புகள் மற்றும் வெளிநாட்டுத் தாக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாகச் சிந்திக்கும் நமது திறன் ஆகியவையே ஆகும். இதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது, ஏனென்றால், நாம் எவ்வாறு சிதைக்கப்பட்டது என்பதை மறக்கும் ஒரு நாகரிகம், மீண்டும் எழுவது எப்படி என்பதையும் மறந்துவிடும்" என்று அவர் கூறினார்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஏற்கனவே பலவீனமடைந்திருந்த இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள், அறிவை எரிக்கவில்லை — அதற்குப் பதிலாக அதை மாற்றினார்கள். அவர்கள் சிந்தனையாளர்களை அல்ல, எழுத்தர்களை உருவாக்கும் வகையில் ஒரு கல்வி முறையை வடிவமைத்தனர், அவ்வாறு செய்ததன் மூலம், ஒரு காலத்தில் நாட்டை ஒன்றிணைத்த கதைகள், ஞானம் மற்றும் கற்பனைத்திறன் ஆகியவற்றை அழித்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கு மாறாக, "இந்தியா கனவுகளை விற்பதில்லை — அது கனவுகளை யதார்த்தமாக மாற்றுகிறது" என்று அதானி கூறினார். வரலாற்று ரீதியாக அதிக கார்பனை வெளியிட்ட நாடுகள், உலகின் மிகக் குறைந்த தனிநபர் உமிழ்வுகளில் ஒன்றாக இந்தியா இருந்தபோதிலும், இந்தியா எவ்வாறு வளர வேண்டும் என்று பரிந்துரைக்க விரும்புவதாகக் கூறினார்.
"மக்கள் சுரங்கத் தொழிலை பழைய பொருளாதாரம் என்று அழைக்கலாம் என்றும், ஆனால் அது இல்லாமல், புதிய பொருளாதாரம் இல்லை" என்று கூறினார். மாணவர்கள் "பயமின்றி கனவு காணுங்கள், அதற்காக தொடர்ந்து உழையுங்கள்" என்றும், புதுமைகளைத் தழுவி, இந்தியாவின் இறையாண்மைத் திறன்களைக் கட்டியெழுப்பும் "அடிப்படையின் பாதுகாவலர்களாக" மாறி, ஒரு நம்பிக்கையான, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கு உதவ வேண்டும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நமது நாட்டில் உள்ள வளங்கள் குறித்து முதலில் தோ்ச்சி பெற வேண்டும். பின்னா், நமது வளா்ச்சிக்குத் தேவையான எரிசக்தியில் தோ்ச்சி பெற வேண்டும். இவைதான் பொருளாதார சுதந்திரத்தின் இரண்டு தூண்கள் ஆகும்.
வரலாற்று ரீதியாக, அதிக காா்பன் மாசு ஏற்படுத்திய வளா்ந்த நாடுகள், இப்போது வளா்ந்து வரும் நாடுகள் எப்படி வளா்ச்சி அடைய வேண்டும் என்று ஆதிக்கம் செலுத்தப் பாா்க்கின்றன. இது ஒரு புதியவகை காலனித்துவம்.
தனது மண்ணுக்கு அடியில் உள்ள வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதில்தான் நாட்டின் இறையாண்மை இருக்கிறது என்று வலியுறுத்திய கௌதம் அதானி, தற்போது உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நலனைப் பாதுகாப்பதில் தூய சுயநலத்துடன் செயல்படுழதிலும், உலகளாவிய நட்புக் கூட்டணிகள் சிதைவதிலும் முனைப்புக் காட்டி வரும் நிலையில், இந்தியா தனது வளர்ச்சிக்கு எரிபொருளாக இருக்கும் எரிசக்தி அமைப்புகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும், தமக்கான சொந்த வளா்ச்சிப் பாதையைத் தாமே வகுக்க வேண்டும் என்றும், தற்போதைய காலகட்டம் பொருளாதார மற்றும் வளச் சுதந்திரத்திற்கான இந்தியாவின் "இரண்டாவது சுதந்திரப் போராட்டம்" என்றார்.
"இந்தியா தனக்கு எது சிறந்ததோ அதை மட்டுமே செய்ய வேண்டும். அதன் சொந்த வளர்ச்சிப் பாதையை வரையறுக்க வேண்டும். நமது திட்டங்களை நாமே கட்டுப்படுத்தவில்லை என்றால், நமது வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொள்ளும் உரிமையும் லட்சியமும் ஒரு உலகளாவிய குற்றமாகச் சித்தரிக்கப்படும்" என்று அவர் கூறினார்.
சா்வதேச தரவுகளின்படி, இந்தியா நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே மிக வேகமாக 50 சதவீதத்துக்கும் அதிகமான புதைபடிவம் அல்லாத (காா்பன் வெளியேற்றாத) எரிசக்தித் திறனை அடைந்துள்ளது. மேலும், தனிநபா் காா்பன் உமிழ்வு அளவு உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைவாக உள்ளது.
தனிநபர் அளவீடுகள் அல்லது வரலாற்றுப் பொறுப்பைக் கருத்தில் கொள்ளாமல், இந்தியாவின் இந்தச் சிறந்த செயல்திறனைக் குறைத்து மதிப்பிடும் முயற்சிகள், உலகளாவிய சுற்றுச்சூழல் விதிகளை நிா்ணயிக்கும் கட்டமைப்பில் உள்ள பாரபட்சத்தைக் காட்டுகிறது. வெளிநாட்டவா்களின் அழுத்தங்களுக்குப் பணியாமல், வளங்கள், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா தனது தனிப்பட்ட பலத்தை உருவாக்க வேண்டும் என்று அதானி வலியுறுத்தினாா்.
அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.