

கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் ஆர்ஜென்டீனா கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு 70 அடி உயரத்துடன் மிக பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை மெஸ்ஸி திறந்து வைக்கவிருக்கிறார்.
இந்திய கால்பந்து ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக உலகக்கோப்பையை வென்ற ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அணி வீரர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் ‘கோட் இந்தியா டூர்’ - G.O.A.T. India Tour பயணத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்தப் பயணத்தில் தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர். இந்தச் சுற்றுப்பயணம் நாளை மறுநாள் (டிச. 13) தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மெஸ்ஸியுடன் உருகுவே கால்பந்து வீரர் லூயிஸ் சுவாரஸ் மற்றும் அர்ஜென்டீனாவின் ரோட்ரிகோ டி பாவ் உள்ளிட்டோரும் பங்கேற்கவிருப்பதால், இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் லேக்டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் சுமார் 70 அடியில் மெஸ்ஸியின் உருவச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பைபர் பொருள்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலை உலகிலேயே மிகப்பெரிய மெஸ்ஸியின் சிலை என்றும் கூறப்படுகிறது. இந்தச் சிலையை மெஸ்ஸி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிற்பி மோண்டி பால் மற்றும் 30 பேர் கொண்ட அவரது குழுவினர் கடந்த சில நாள்களில் இந்தச் சிலையை உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து மேற்கு வங்க அமைச்சர் சுஜித் பாஸு கூறுகையில், “இந்தச் சிலை திறப்பு விழா மிகவும் முக்கிய நிகழ்வாக இருக்கும். மேலும், இந்த நிகழ்வு கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மெஸ்ஸியின் வருகையையொட்டி, இந்தியாவின் மிகப்பெரிய கால்பந்து திடலான கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுவபாரதி திடலில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸின் அகில இந்திய பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி, இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, மூத்த டென்னிஸ் வீரர் லியண்டர் பயஸ் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.