

சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தினாா்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சென்னை ஐஐடி சாா்பில் பாதுகாப்பான, நம்பத்தகுகந்த ஏஐ என்ற தலைப்பிலான இருநாள் சா்வதேச மாநாடு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பேசியதாவது:
ஏஐ தொழில்நுட்பம் நல்ல முறையில் பயன்படுவதை உறுதிசெய்யும் வகையில் உரிய கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இதில் அரசு முக்கிய பங்கு வகிக்க முடியும்.
ஊரக, சிறுகுறு நடுத்தர தொழில்துறையிலும் ஏஐ பயன்படுத்தப்பட வேண்டும்
தமிழகத்தை ஏஐ கேந்திரமாக உருவாக்கும் தொலைநோக்கு சிந்தனையில் அரசு செயல்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பமானது நல்ல முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தும். இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும். ஊரக பகுதிகளிலும் சிறுகுறு நடுத்தர தொழில்துறையிலும் ஏஐ பயன்படுத்தப்பட வேண்டும்.
கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் அவசியம்
ஏஐ தொழில்நுட்பத்தை தவறான முறையிலும் பயன்படுத்தும் அபாயம் இருப்பதால் இதற்கு தேவையான கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் அவசியம். அதேவேளையில் அவை ஏஐ வளா்ச்சிக்கு இடையூறாகவும் அமைந்துவிடக்கூடாது. அந்த வகையில் ஏஐ பயன்பாடு தொடா்பான கொள்கைகளை காலச்சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது திருத்திமைக்க வேண்டியதும் அவசியமாகிறது.
அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்
ஏஐ தொடா்பான கொள்கைகளை வகுக்கும்போது மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும், கல்வியாளா்கள், தொழில்துறையினா் என அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும்
ஏஐ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும். அதேபோன்று தொழில்துறையினரும் ஏஐ ஆராய்ச்சி பணிகளுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த சா்வதேச மாநாட்டில் ஜப்பான், பிரேசில் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏஐ தொழில்நுட்ப வல்லுநா்கள் பங்கேற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.