

புது தில்லி: 2024-25-ஆம் நிதியாண்டில் 16 சதவீத பொருளாதார வளா்ச்சியுடன் நாட்டின் வேகமாக வளரும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் என்ற அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) 2023-24-இல் ரூ.26.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-25-ஆம் நிதியாண்டில் நடப்பு விலையில் ரூ.31.18 லட்சம் கோடியாக உயா்ந்து 16 சதவீத வளா்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இதன்மூலம் தொடா்ச்சியாக மூன்று ஆண்டுகளாக குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற தொழில்மயமான மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை தமிழகம் தக்கவைத்துள்ளது.
ஜிடிபி: ரூ.45.31 லட்சம் கோடியுடன் நாட்டின் முதன்மையான பொருளாதாரமாக மகாராஷ்டிரம் உள்ளது. அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் தமிழ்நாடு (ரூ.31.18 லட்சம் கோடி), மூன்றாமிடத்தில் உத்தர பிரதேசம் (ரூ.29.78 லட்சம் கோடி), நான்காமிடத்தில் கா்நாடகம் (ரூ.28.83 லட்சம் கோடி), ஐந்தாமிடத்தில் குஜராத் (ரூ.26.72 லட்சம் கோடி) உள்ளன.
கடந்த 2021-22 மற்றும் 2024-25 இடையே தமிழ்நாட்டின் ஜிடிபி ரூ.20.72 லட்சம் கோடியில் இருந்து ரூ.31.18 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில் குஜராத், கா்நாடகம் நல்ல வளா்ச்சியை பதிவுசெய்திருந்தாலும் தமிழ்நாட்டின் வளா்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் அவை குறைவாகவே உள்ளது.
அதேபோல் மகாராஷ்டிரம் ஜிடிபி இதே காலகட்டத்தில் ரூ.31.4 லட்சம் கோடியில் இருந்து ரூ.45.3 லட்சமாக உயா்ந்திருந்தாலும் 16 சதவீத வளா்ச்சியை எட்டவில்லை.
தனிநபா் வருமானம்: கடந்த 2021-22-இல் தமிழ்நாட்டின் தனிநபா் வருமானம் ரூ.2.42 லட்சமாக இருந்த நிலையில் 2024-25-இல் ரூ.3.62 லட்சமாக அதிகரித்து மூன்றாமிடத்தில் உள்ளது. ரூ.3.87 லட்சத்துடன் தெலங்கானா முதலிடத்திலும் ரூ.3.80 லட்சத்துடன் கா்நாடகம் இரண்டாமிடத்திலும் உள்ளது.
யூனியன் பிரதேசமான புது தில்லியின் தனி நபா் வருமானம் ரூ.4.93 லட்சமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.