

புதுதில்லி: தேர்தல் நேரங்களில் ஒரு பக்கம் வாக்குகளைத் திருடும் பாஜக, மறுபக்கம் வாக்குக்கு ரூ.10,000 வழங்கி வருகிறது என்றும் பாஜகவினரின் டிஎன்ஏவில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது என குற்றம்சாட்டிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மோடி, அமித் ஷா - ஆர்எஸ்எஸ் ஆட்சியை அகற்றுவோம் என சபதமிட்டார்.
தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பாக அண்மையில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது வாக்குத் திருட்டு எவ்வாறு நடைபெறுகிறது மற்றும் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் முறைகேடு குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தனர். அதனை மோடி அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செய்தியாளா் சந்திப்பில் விவாதத்துக்கு அழைத்தாா். ஆனால் அமித் ஷா அதற்கு தயாராக இல்லை.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வாக்குத் திருட்டு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை(டிச.14) 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' பேரணி நடைபெற்றது.
இதில், அந்த கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் இருக்கும்போது மட்டுமே தைரியத்தைக் காட்டுகிறது என்றும், உள்துறை அமைச்சரின் நடத்தை அதனையே பிரதிபலித்தது. "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, அவர்களுக்காக (தேர்தல் ஆணையம்) "கைகள் நடுக்கத்துடன்" விளக்கம் அளித்ததாகக் குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையம், பாஜகவிற்கு ஆதரவாக இணைந்து செயல்படுகிறது. மோடி அரசு அவர்களுக்காக சட்டத்தில் மாற்றம் செய்து தலைமை தேர்தல் ஆணையரை பாதுகாக்கிறது. இதன் விளைவாக, தேர்தல் நேரங்களில் ஒரு பக்கம் வாக்குகளைத் திருடும் பாஜக, மறுபக்கம் வாக்குக்கு ரூ.10,000 வழங்கி வருகிறது. வாக்குத் திருட்டு பாஜகவின் டிஎன்ஏ-வில் நிறைந்துள்ளது என குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, தனது கட்சி சத்தியத்தின் பக்கம் நிற்பதாகவும், நரேந்திர மோடி-ஆர்எஸ்எஸ் அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றுவோம் என சபதமிட்டார்.
மேலும், நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஆணையர்கள், மோடியின் தேர்தல் ஆணையர்கள் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த சட்டத்தை மாற்றி உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம். ஏனென்றால் நாங்கள் உண்மைக்காகப் போராடுகிறோம் என்று அவர் கூறினார்.
'தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் மசோதா 2023'-ஐ மாற்றுவதாகவும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் பாஜகவுக்காகப் பணிபுரிவதாகக் குற்றம் சாட்டியவர், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என சபதம் செய்தார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் ஒரு அறிக்கையைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டிய ராகுல், மோகன் பாகவத் உலகம் உண்மையை பார்ப்பதில்லை, அது அதிகாரத்தையே பார்க்கிறது. யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ, அவர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் பாகவத்தின் சிந்தனை. இந்த சித்தாந்தம் ஆர்.எஸ்.எஸ்-க்கு சொந்தமானது. காங்கிரஸ் சித்தாந்தம், இந்தியாவின் சித்தாந்தம், இந்து மதத்தின் சித்தாந்தம், உலகின் ஒவ்வொரு மதத்தின் சித்தாந்தமும் உண்மைதான் மிக முக்கியமானது என்று கூறுகிறது. ஆனால், உண்மை அர்த்தமற்றது, அதிகாரமே முக்கியம் என்கிறார் பாகவத். நாங்கள் உண்மை, சத்தியத்தின் பக்கம் மட்டுமே நிற்போம்.
இந்த மைதானத்தில் இருந்து நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை அளிக்கிறேன், நாங்கள் உண்மையை நிலைநிறுத்தி, சத்தியத்தின் பின்னால் நின்று, மோடி மற்றும் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்தை நாட்டில் இருந்து அகற்றுவோம். நீங்கள் அதை பார்ப்பீர்கள். அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறார்கள் என்று அவர் கூறினார்.
தேர்தல் முறைகேடுகள் குறித்த காங்கிரஸின் பிரசாரத்தைச் சுற்றியுள்ள தீவிரமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் காங்கிரஸின் இந்த பேரணி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.