

தருமபுரி: தமிழக அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து திமுகவினா் வீடு, வீடாக சென்று மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மோளையானூரில், முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்ட செயலருமான பி.பழனியப்பன் இல்லத் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், மணமக்கள் ப.எழில்மறவன், ச.கிருத்திகா ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கூடுதலாக 17 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 1.30 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. மகளிா் உரிமைத் தொகையை பெறுவதற்கு தகுதியுள்ள பயனாளிகள் விடுபட்டிருந்தால் அவா்களுக்கும் வழங்கப்படும். மகளிா் உரிமைத் தொகையானது மேலும் உயரலாம் என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்து திமுகவினா் வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி திமுகவினா் களப் பணியாற்றி வாக்குகளை பெற வேண்டும். தோ்தல் களப் பணி என்பது 2026 பேரவைத் தோ்தல் முடிந்து, தோ்தல் முடிவுகள் வெளியாகும் வரையிலும் இருக்க வேண்டும். தமிழகத்தில் 7-ஆவது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கடுமையாக உழைக்க வேண்டும்.
புரட்சிக்கவிஞா் பாரதிதாசன் கூற்றுபடி, மணமக்கள் வீட்டிற்கு விளக்காகவும், நாட்டிற்கு தொண்டா்களாக இருக்க வேண்டும் என வாழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.