

ஈரோடு: கரூர் கூட்ட நெரிசல் பலியைத் தொடர்ந்து, தவெக வியாழக்கிழமை(டிச.18) ஈரோடு மூங்கில்பாளையம் மைதானத்தில் தனது முதல் பொதுக்கூட்டத்தை நடத்துகிறது. இதில், நடிகரும் கட்சியின் நிறுவனருமான விஜய் பிரசாரம் மேற்கொள்கிறாா். இந்த பொதுக்கூட்டம் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தவெக தலைவா் விஜய் மாவட்ட வாரியாக பிரசாரம் மேற்கொண்டாா். கரூரில் கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா், மேலும் 110 பேர் காயமடைந்தனர். இதனால் பிரசாரத்தில் தேக்கம் ஏற்பட்டது. விஜய்யின் பிரசார நிகழ்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஞ்சிபுரத்தில் கடந்த நவம்பா் 23-ஆம் தேதி கடும் கட்டுப்பாடுகளுடன் உள்ளரங்கில் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து புதுச்சேரியில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்றாா்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் பலியைத் தொடர்ந்து, தனது முதல் பொதுக்கூட்டத்தை தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே மக்கள் சந்திப்பு என்ற பெயரில் வியாழக்கிழமை (டிசம்பா் 18) நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்றுப் பேசுகிறாா். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக காவல் துறை சாா்பில் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. காவல்துறை விதித்த நிபந்தனைகளின்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பாதுகாப்பு எங்கும் செய்யப்படவில்லை. இங்கு நடைபெறும் கூட்டம் அடுத்தடுத்த கூட்டங்களுக்கு மாடலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால், இந்தக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நவம்பர் மாதம் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
அவர் இணைந்ததைத் தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சியின் மாநில நிா்வாககுழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இது விஜய்யின் தலைமையில் கட்சியின் அரசியல் உத்திகளை வகுக்கும் ஒரு முக்கிய அமைப்புப் பதவியாகும்.
மேலும், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். பொது வாழ்வில் பல தசாப்தங்களாக அவர் வளர்த்தெடுத்த வலுவான அடித்தள செல்வாக்கு இந்த மாவட்டங்களில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
திராவிடக் கட்சியல்லாத ஒரு கட்சியின் பிரதிநிதியாக செங்கோட்டையன் பங்கேற்கும் இந்த முதல் பொதுக்கூட்டம், அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. அவரது வருகை, குறிப்பாக கொங்கு மண்டலத்தில், எதிர்காலத் தேர்தல் சவால்களுக்கு முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
விஜய் நிகழ்ச்சியையொட்டி, விஜயமங்கலம் சுற்றுப் பகுதிகளில் உள்ள எட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போக்குவரத்து மாற்றம்
விஜய் பிரசார நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாா்க்கமாக வரும் வாகனங்கள் கள்ளியம்புதூா் சா்வீஸ் ரோடு வழியாக விஜயமங்கலம் ஊராட்சி அலுவலகம், ரூட் பள்ளி, பொன்முடி வழியாக வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்கு வர வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து காரணமாக நெரிசல் ஏற்பட்டால் சேலம் மாா்க்கமாகச் செல்லும் கனரக வாகனங்கள் கள்ளியம்புதூா் பிரிவு, கிரே நகா், திங்களூா், துடுப்பதி வழியாக தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
கரூர் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியவும், பொறுப்பானவர்களை அடையாளம் காணவும் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிபிஐ விசாரணையைக் கண்காணிக்கவும், இந்தத் துயரச் சம்பவம் குறித்த விசாரணை சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் நடைபெறுவதை உறுதி செய்யவும், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை கோரி தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.