நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நாமக்கல் ஆஞ்சனேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி...
ஒரு லட்சத்து 8 வடைமாலை அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சனேய சுவாமி.
ஒரு லட்சத்து 8 வடைமாலை அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சனேய சுவாமி.
Updated on
1 min read

நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு லட்சத்து 8 வடை மாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சனேயர்

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் புகழ்பெற்ற ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சனேயரை தரிசித்துச் செல்கின்றனர்.

கோலாகலமாக கொண்டாடப்படும் ஜெயந்தி விழா

இந்த கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம், சர்வ அமாவாசை நாளில் சுவாமியின் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

அதன்படி, நிகழாண்டில் வெள்ளிக்கிழமை(டிச.19) ஆஞ்சனேய ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஒரு லட்சத்து 8 எண்ணிக்கையிலான வடைமாலை

இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் 5 டன் எடை கொண்ட பல வண்ண, நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதிகாலை 4.30 மணிக்கு ஒரு லட்சத்து 8 எண்ணிக்கையிலான வடைமாலை சாத்தப்பட்டு, அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சனேயரை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் வடைமாலை அகற்றப்பட்டு, நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றாலான சிறப்பு அபிஷேகம், சொர்ணாபிஷேகமும் நடைபெற உள்ளது.

தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள்

பிற்பகல் 1 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கின்றன. அதன்பிறகு பக்தர்களுக்கு சுவாமிக்கு சாத்தப்பட்ட வடைகள் பிரசாதமாக வழங்கப்படும்.

தன்னார்வலர்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாமக்கல் மட்டுமின்றி, சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் வந்திருந்து சுவாமியை தரிசித்தனர்.

பலத்த பாதுகாப்பு

பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் நாமக்கல் கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது. கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Summary

A garland of 1,00,008 vadas adorned the idol of Anjaneya in Namakkal. a large number of devotees offered prayers to the deity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com