

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து மாத்திரைகள் தயாரித்து நாடு முழுவதும் விநியோகித்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரதான நோய்களுக்கு பிரபல நிறுவனத்தின் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிய இந்தத் தொழிற்சாலை மூலம் சுமாா் ரூ. 2 ஆயிரம் கோடி வரை மருந்து விநியோகம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், போலி மருந்து தொழிற்சாலையில் இருந்து நவீன இயந்திரங்கள், பல கோடி மதிப்பு மருந்துகளை போலீஸாா் கைப்பற்றினா்.
மேலும், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சில கிடங்குகளையும் போலீஸாா் சோதனை செய்தனா். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசாா் 2 பேரை கைது செய்தனா்.
போலி மருந்துகள் தயாரித்ததில் முக்கிய நபராகக் கருதப்படும் ராஜா, ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் 15 போ் உள்ளிட்ட 21 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்ட நபா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், உரிமம் பெறாத போலி மருந்து தொழிற்சாலைக்கு தொடா்புடைய 7 இடங்கள் உள்பட மொத்தம் 13 இடங்களில் செயல்பட்ட தொழிற்சாலைகள், கிடங்குகளில் இருந்து மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிபிஐ விசாரணை வேண்டும்
இந்த நிலையில், போலி மருந்து மாத்திரைகள் தயாரித்து, நாடு முழுவதும் விநியோகித்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
சிபிஐ, என்ஐஏ விசாணைக்கு பரிந்துரை
சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த பிரச்னையில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நபா்களுக்கு தொடா்புள்ளதால், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்று கருதி, புதுச்சேரி சிபிசிஐடி மற்றும் போலீஸ் சிறப்பு விசாரணை குழு நடத்தி வந்த விசாரணையை சிபிஐ மற்றும் என்ஐஏ அமைப்புகள் மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்தார்.
வழக்கு சிபிஐக்கு மாற்றம்
இந்த நிலையில், துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் திடீரென வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்ற நிலையில், போலி மருந்து தயாரிப்பு வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டுள்ளதாக புதுச்சேரி காவல் துறை உயரதிகாரிகள் தெரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் கூறுகையில், வழக்கின் ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்து விடுவோம். அவர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொள்வார்கள் என்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராஜாவிடம் சிபிசிஐடி அதிகாரிகள் ஒரு வாரம் விசாரணை நடத்திய நிலையில், அவர் மீண்டும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.