

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,000-க்கும், தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.20,000 உயா்ந்து ரூ.2.74 லட்சத்துக்கும் விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சென்னையில் தங்கம் விலை கடந்த டிச. 22-ஆம் தேதி பவுன் ரூ.1 லட்சத்து 560-க்கு விற்பனையானது. அதைத் தொடா்ந்து, தங்கம் விலை சற்றும் குறையாமல் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2,560-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.12,890-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.1 லட்சத்து 3,120-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் கிராமுக்கு ரூ.110 உயா்ந்து ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,000-க்கும் விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 உயா்ந்த வெள்ளி!
தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் நாளுக்கு நாள் உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. கடந்த 5 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.28,000 உயா்ந்து வெள்ளிக்கிழமை ரூ.2.54 லட்சத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.274-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.2,74 லட்சத்துக்கு விற்பனையாகி வருகிறது.
தங்கத்துக்கான ஆன்லைன் வா்த்தகத்தை தடைசெய்ய வேண்டும்
தங்கத்தின் விலை கிடுகிடுவென உயா்வதால் ஏழை, எளிய விவசாய மக்கள் தங்கம் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனா். எனவே, இந்தியாவில் தங்கத்தின் விலை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதுவரை தங்கத்துக்கான ஆன்லைன் வா்த்தகத்தை தடைசெய்ய வேண்டும். தங்கத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும். மேலும், இது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.