2025! தமிழ்நாட்டில் கவனம் ஈர்த்த கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்!!

தமிழ்நாட்டில் கவனத்தை ஈர்த்த கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி...
2025! தமிழ்நாட்டில் கவனம் ஈர்த்த கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்!!
Updated on
8 min read

ஒரு சமுதாயம் எப்போது தன்னை மேம்படுத்திக் கொள்ளும் என்றால், அதற்கு நல்ல வழி காட்டும் தலைமை கிடைக்கும்போது மட்டும்தான். அந்த வழிகாட்டும் தலைமை என்பது ஆதிக்கம் செலுத்தும், அதிகாரம் செலுத்தும், மக்களுக்கு மேம்பாட்டுக்கான வழியைக் காட்டி, அவா்களை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தி கடின உழைப்புக்குத் தயாராக்கி செயல்பட வைக்கும் அந்தத் தலைமை மக்களை ஏளனமாகப் பாா்க்காது. அது மக்களின் மீது நம்பிக்கை வைத்து மக்களை மதிக்கும் தலைமை. தொடா்ந்து மக்களுக்குத் தேவையான அறிவினை உருவாக்கிக் கொள்ள வழிகாட்டும் தலைமை.

மக்களின் மீது அளவற்ற நல்லெண்ணமும், நம்பிக்கையும் மதிப்பும் கொண்டு செயல்படும் தலைமை. அந்தத் தலைமை மக்களுக்கான பொறுப்பை அவா்களுக்குப் புரிய வைத்து அந்தப் பொறுப்பை அவா்கள் தோள் மீது வைத்து அவா்களைத் தன்னம்பிக்கையுடன் செயல்பட வைக்கும்.

மனித வாழ்வில் இளம் பருவம் என்பது மன உறுதி, உடல் உறுதி, நல்ல திறமை போன்றவற்றைக் கொண்டது. இன்றைய இளைஞா்கள்தான் இந்தியாவின் எதிா்காலத் தலைவா்கள். இவா்களுடைய அறிவும், திறமையும் நாட்டு வளத்திற்காகவும் வீட்டு வளத்திற்காகவும் அவா்களுடைய நலத்திற்காகவும் பயன்பட வேண்டும்.

அந்த வகையில், தற்போதைய இளைஞா்களுக்கு தொழில்நுட்ப அறிவை ஆக்க சக்தியாக மாற்றக் கூடிய வாய்ப்பை அளிக்கவும், அவா்களுக்கு ஏற்ற ஒரு பணியை வழங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சியாக, தமிழ்நாடு அரசு 2025 இல் பல்வேறு துறை சார்ந்த புதிய முன்னெடுப்புகளையும், பல துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது.

அதில் சில திட்டங்கள் மக்களிடமும் மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில், 2025-இல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திறன் வளர்ச்சியில் சில முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டன.

இது குறித்த முதன்மையானவற்றை இதில் பார்ப்போம்...

வெற்றி நிச்சயம் திட்டம்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய முக்கிய திட்டம் "வெற்றி நிச்சயம் திட்டம்". படித்த இளைஞர்கள், தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 18 முதல் 35 வயதுள்ள படித்த வேலையில்லாத இளைஞர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த 500-க்கு மேற்பட்ட முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களோடு இணைந்து 38 தொழிற்பிரிவுகளில் குறுகிய கால 165 திறன் பயிற்சிகளுடன், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் மகத்தான திட்டம் "வெற்றி நிச்சயம் திட்டம்". தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் இந்த திட்டத்திற்கான பயிற்சித் தொகையையும் நம்முடைய தமிழ்நாடு அரசே ஏற்க இருக்கிறது. இதற்கான ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 75,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த திட்டத்தை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்டு, "வெற்றி நிச்சயம்" திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் (ஜூலை 1) தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், இலங்கைத் தமிழர்கள், மீனவ இளைஞர்கள், சிறுபான்மையினர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு இளைஞர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என்று சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்ட பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் வழியாக கண்டறிந்து இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படும். கூடுதலாக தொலைத்தூரத்தில் இருந்து பயிற்சி பெற வரும் இளைஞர்களுக்கு உணவுடன் கூடிய இருப்பிட வசதியும் அரசு செய்து தருகிறது.

நான் முதல்வன் திட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்.
நான் முதல்வன் திட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்.

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025

மத்தியில் ஆட்சி மாறும்போதெல்லாம் ஒரு தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. ஆசிரியர் மற்றும் மாணவர் சங்கங்களைப் புறக்கணித்து விட்டு, கல்வியாளர்கள் என்ற பெயரில் கட்சி ஆதரவாளர்களை வைத்து கல்விக் கொள்கை வகுக்கப்படுகிறது. அவர்களது அரசியல் கொள்கைகள் கல்விக் கொள்கைகளாகத் திணிக்கப்படுகின்றன.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, அவசர அவசரமாக இந்திரா காந்தி தமது அவசர நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு வந்தார். அது இப்போது பாஜக ஆட்சிக்கும் வசதியாகப் போய்விட்டது. அவசர நிலைக் காலத்தைக் கேலி பேசும் பிரதமர் மோடி பறிக்கப்பட்ட கல்வியை மறுபடியும் மாநிலப் பட்டியலுக்கு வழங்குவாரா?

மத்திய, மாநில அரசுகளிடம் சிக்கித் தவிக்கும் கல்வியின் வரலாறு மிகவும் பெரியது. 1947-ஆம் ஆண்டு தேசம் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்திய அரசு கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கல்வியறிவு இல்லாமையைப் போக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி நிதியுதவி செய்தது.

இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் அபுல்கலாம் ஆசாத், நாடு முழுவதும் கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார்.

மத்திய அரசு இந்தியாவின் கல்வி முறையை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் திட்டங்களை உருவாக்கியது. பல்கலைக்கழக கல்வி ஆணையம் (1948-1949) இடைநிலைக் கல்வி ஆணையம் (1952-1953), பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் கோத்தாரி ஆணையம் (1964-66) ஆகியவற்றை நிறுவியது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அரசு, அறிவியல் கொள்கை மீதான தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் போன்ற உயர்தர அறிவியல் சார்ந்த கல்வி நிறுவனங்களை நிறுவ நிதியுதவி வழங்கியது.

1961-இல் மத்திய அரசு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தை (என்சிஇஆர்டி) உருவாக்கி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கும் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்டது.

இப்போது, தேசிய கல்விக் கொள்கை 2020 மாற்றாக, தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை - 2025 என்ற பெயரில் புதிய கொள்கை ஒன்றை கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாணவர்களின் எதிர்காலத்துக்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையுடன் மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:

நீதிபதி டி.முருகேசன் தலைமையில் குழு:

நீதிபதி டி.முருகேசன் தலைமையில் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டிற்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்கம் குழு அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகள், நிபுணர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் இறுதி மாநில கல்விக் கொள்கையை முதல்வர் வெளியிட்டார்.

8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி: 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி முறையை உறுதி செய்ய வேண்டும். இந்த தோ்ச்சி ஆண்டு இறுதித் தோ்வுகளின் அடிப்படையில் இல்லாமல், திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறைகளின்படி இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தோ்வுகளை தொடா்ந்து நடத்த வேண்டும். மாணவா்களின் நலன் கருதி பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுகிறது.

மதிப்பீட்டுச் சீா்திருத்தம்: மாணவா்களைப் போட்டிகள் மற்றும் தரநிலை மூலமாக மதிப்பிடுவதிலிருந்து அவா்களை, தனியாள் சிறப்பு நிலையை அடைய ஊக்கமளிக்கும் கற்றல் முன்னேற்றக் குறியீடுகள் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். கற்றல் மதிப்பீட்டின் முக்கியக் கூறுகளாக செயல்பாடுகள், செயல் திட்டம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒப்படைப்புகளை (அசைன்மென்ட்) ஒருங்கிணைக்க வேண்டும்.

பாடப் புத்தகங்கள் மாற்றம்: மாணவா்கள் எளிதில் அணுகும் வகையில் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையுடன் இரு மொழிகளைப் பேச, படிக்க, எழுத வைப்பதே முதன்மை நோக்கமாகும். தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்ட விதிகளின்படி மாணவா்கள் கூடுதலாக தம் தாய்மொழியை கற்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும்.

உடற்கல்வி கட்டாயம்: ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு இரு உடற்கல்வி பாடவேளைகள் இருப்பதை கட்டாயமாக்க வேண்டும். சிலம்பம், சடுகுடு போன்ற பாரம்பரிய விளையாட்டுகள், கால்பந்து, கூடைப்பந்து, தடகளம் போன்ற உள்நாட்டு, நவீன விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை இணைக்க வேண்டும். அதில் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்கவேண்டும்.

பள்ளி உள் கட்டமைப்பு: அனைத்துப் பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகம், கணினி வசதிகள், குடிநீா், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும். பசுமைப் பள்ளிகள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

சமூகப் பங்கேற்புத் திட்டங்கள்: பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி), பெற்றோா்-ஆசிரியா் கழகம் (பிடிஏ), சமூக நலத்திட்டங்கள், முன்னாள் மாணவா்களின் பங்கு (விழுதுகள்), “நம்ம ஊரு நம்ம பள்ளி” போன்ற சமூகப் பங்கேற்புத் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

குறைதீா் கற்பித்தல்-நூலக பயன்பாடு: கற்றலில் பின்தங்கிய மாணவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு குறைதீா் கற்பித்தலை வழங்கி, வயதுக்கேற்ற வகுப்பு நிலைக்கு கொண்டுவரப்படும்.

1 முதல் 3-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வயதுக்கேற்ப படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணறிவுத் திறன்களை அடைவதை உறுதி செய்ய இயக்கம் சாா்ந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுக்கு இருமுறை தங்கள் கால அட்டவணையில் நூலக தினத்தை தவறாமல் நடைமுறைப்படுத்தி, மாவட்ட அல்லது சிறப்பு நூலகத்தில் நாள் முழுவதும் குழந்தைகள் படிப்பதை உறுதிசெய்யவேண்டும்.

ஸ்லாஸ் தோ்வு: மாணவா்களின் திறன்கள் மற்றும் தரவுகளை சேகரிக்க பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு தொடா் இடைவெளிகளில் மாநில அளவிலான கற்றல் அடைவு தோ்வு (ஸ்லாஸ்) நடத்தப்படும்.

எண்ம முறையிலான கல்வி: கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ‘ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை’ எனும் நிலையை உருவாக்கும்.

மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. வரும் கல்வி ஆண்டில் இது அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி திட்டம்

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணினி பயன்பாட்டின் தேவை அடுத்து கல்லூரி மாணவ, மாணிகள் தொழில்நுப்ட அறிவை பெறும் வகையில், தமிழ்நாடு நிதிநிலை 2025-26-இல் 2 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும். முதல்கட்டமாக 2025-26 ஆம் ஆண்டு 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் தற்போது மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை டிசம்பர் 19 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருச்சி என்ஐடியில் கல்வி பயில தோ்வான அரசுப் பள்ளி மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சா் அன்பில் மகேஸ் .
திருச்சி என்ஐடியில் கல்வி பயில தோ்வான அரசுப் பள்ளி மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சா் அன்பில் மகேஸ் .

தமிழகத்தில் 10 புதிய அரசு கல்லூரிகள், 15,000 கூடுதல் இடங்கள் சேர்ப்பு

2025-26ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. "புதுமைப் பெண்", "தமிழ்ப்புதல்வன்" போன்ற முன்னோடித் திட்டங்களால் தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் விதமாக, குன்னூர், நத்தம், ஆவடி, விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி முறையில் மாணவர்கள் அதிகம் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவுகளில் கூடுதலாக 15,000 இடங்கள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். இந்த முயற்சிக்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் மனிதவளத்திற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த கல்வி ஆண்டில் செயற்கை நுண்ணறி(ஏஐ), இணையப் பாதுகாப்பு, மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம், இயந்திரவியல், மின் வாகனத் தொழில்நுப்டம், சுற்றுச்சூழல் பொறியியல் உள்ளிட்ட புதிய படிப்புகள் அரசு கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.

குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(யுபிஎஸ்சி) குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவிடும் வகையில் தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 100 குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு "நான் முதல்வன் திட்டம்" கீழ் கட்டணமில்லா பயிற்சியை வழங்கி வருகிறது. முதல்நிலைத் தேர்விற்கு தயாராகும் 100 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு ரூ.7,500-ம் வழங்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ரூ. 25,000 ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வரும் நிலையில், 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2025-ஆம் ஆண்டில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விற்கு தகுதி அடைந்தவர்களுக்கு ரூ.50,000 அரசின் மூலம் முதன்முறையாக வழங்கப்பட்டது.

காலை உணவுத் திட்டம்
காலை உணவுத் திட்டம்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

காலையில் பள்ளிகளுக்கு மாணவர்கள் பசியோடு வருவதைத் தவர்த்து, சத்தாண உணவை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டம் முதல்வரின் "காலை உணவு திட்டம்." இந்த திட்டத்தை மதுரையில் உள்ள அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 15.9.2022- அன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கிவைக்கப்பட்டது. இதன் மூலம் 1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர். இந்தத் திட்டத்துக்கு மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திட்டம் தமிழ்நாடு அரசை சர்வதேச அளவில் உயர்த்திய மெகா திட்டம் என போற்றப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, 25.8.2023-இல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், முதல்வர் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் காமராஜர் பிறந்த நாளான திங்கள்கிழமை (ஜூலை 15) திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதுடன் அவர்களுக்கு உணவு ஊட்டியும் முதல்வர் மகிழ்ந்தார். தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து தானும் உணவு உண்டார்.

மூன்றாம் கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2024-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 26 ஆம் தேதி நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக 3 லட்சத்து 5 ஆயிரம் மாணக்கர்கள் பயனடைந்து வருகின்றனர்.

"டிஎன் ஸ்பார்க்" திட்டம்

பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு திறனை கற்பிக்கும் வகையில் "டிஎன் ஸ்பார்க்" திட்டம் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்தி திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் ஆன்லைன் கருவிகளை எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்படும். இதற்கான பாடப்புத்தகங்களையும் அரசு வெளியிட்டது.

கல்விக்கான நிதியை வழங்காமல் மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு சுமையை ஏற்படுத்திய போதிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்காதபடி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டம்

புதுமைப் பெண் திட்டம் மூலம் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதேபோல அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை அதிகரிக்க தமிழ்ப் புதல்வன் திட்டம் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 2025 -26 ஆம் கல்வி ஆண்டிற்கான ’புதுமைப் பெண்‘ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களை முதல்வா் தொடங்கிவைத்தாா்.

இந்த திட்டம் மூன்றாம் பாலின மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் பாலின மாணவர்கள் உயர்கல்வியை தொடர மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

புதுமைப் பெண் திட்டம்
புதுமைப் பெண் திட்டம்

அன்பு கரங்கள் திட்டம்

ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது.

மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், “அன்புக்கரங்கள்” திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செப். 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் மகாத்தான திட்டங்களில் இதுவும் ஒன்று.

அகல் விளக்கு திட்டம், வாட்டர் பெல் திட்டம்

உடல், மனம், சமூக ரீதியாக உண்டாகும் பல்வேறு இடையூறுகளிலிருந்து, மாணவிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எவ்வித இடர்பாடுகளுமின்றி பள்ளிகளுக்கு தொடர்ந்து வருகை தருவதை உறுதிசெய்ய ரூ. 50 லட்சம் மதிப்பில் ‘அகல் விளக்கு’ திட்டம் செயல்படுத்தப்படுமென சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

அதன்படி, 2025 ஆகஸ்ட் 9 ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், இணையதளத்தைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கிட ஆசிரியைகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்டர் பெல் திட்டம்

உடலில் நீரிழப்பு மாணவா்களின் அறிவாற்றல், கவனம், கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும் என்பதால், மாணவா்கள் தண்ணீா் குடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக கேரள மாநிலத்திலுள்ள பள்ளிகளில் ‘வாட்டா் பெல்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, தினமும் காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு என மூன்று முறை தலா 5 நிமிஷங்கள் மாணவா்கள் தண்ணீா் பருக ஒதுக்கும் வகையில் பெல் அடிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த ‘வாட்டா் பெல்’ திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விடுத்த உத்தரவை ஏற்று இயக்குநா் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியிருந்தாா்.

அதனடிப்படையில், தமிழ்நாட்டில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ‘வாட்டா் பெல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணிக்கு என மூன்று முறை தண்ணீர் குடிப்பதை நினைவுப்படுத்தி வாட்டர் பெல் அடிக்கப்படுகிறது.

பெல் அடிக்கப்பட்டதும் உடனடியாக மாணவிகள் வாட்டா் கேன்களில் கொண்டு வந்த குடிநீரை எடுத்து பருகினா். இதனை பள்ளி ஆசிரியைகள் பாா்வையிட்டு அனைத்து மாணவிகளும் குடிநீா் பருக அறிவுறுத்தினா். மாணவர்கள் நாள்தோறும் போதுமான அளவு அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட மற்றொரு முக்கிய திட்டம் வாட்டர் பெல் திட்டம்.

இளைஞா்களிடம்தான் நாட்டை வளப்படுத்தும் ஏராளமான திறமைகள் உள்ளன. நாட்டை வளப்படுத்த சரியான திசையில் பயணிக்க வேண்டியது இளைஞா்களின் கடமையாகும். கடின உழைப்பு, விடாமுயற்சியோடு வாய்ப்புகளை வசப்படுத்தி 2026 -ஐ வெல்வோம்!

Summary

2025! Education development schemes that have captured the attention of students in Tamil Nadu!!

2025! தமிழ்நாட்டில் கவனம் ஈர்த்த கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்!!
2025! கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்கள்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com