2025! கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்கள்!!

2025 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்கள் தொடர்பாக....
2025!  கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்கள்!!
Updated on
6 min read

பூமியில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து தேடலுக்கான வேட்கை தொடர்ந்து நடந்து வருகிறது. ஓவியங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், புத்தகங்கள் என அடுத்தடுத்த மேம்பட்ட வடிவங்களில் நாம் அறிந்து கொண்ட தகவல்களைத் தற்போது காலத்தின் கொடையான தகவல்தொழில்நுட்பத்தின் அம்சமான கூகுள் தேடுபொறிகள் வாயிலாக அறிந்து வருகிறோம்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான எந்தவொரு தகவல்களையும் விரைவாகவும் எளிதாகவும் தெரிந்துகொள்வதற்கு தேடுபொறி தளமான கூகுளையே நாடுகின்றனர். கூகுள் இல்லாமல் இணையதள பயன்பாடு இல்லை. அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல், யூ-டியூப், தேடல், வரைபடம், தரவுகள் சேமிப்பு, அறிவுத்திறன்களின் செயல்பாட்டு முறை, பணப் பரிமாற்றம், அரசியல், போட்டித் தேர்வுகள், கல்வி, தொழில், வேலைவாய்ப்பு என ஒவ்வொரு செயலியையும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நூறு கோடிக்கு மேல்.

21 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான கூகுள் தேடுபொறியில் இன்றைக்கு உலக அளவில் ஒவ்வொரு வினாடிக்கும் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதன் தகவல் தேடல்களில் நுழைகிறார்கள் எனவும், அதனடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், கண் விழிப்பு முதல் கண் உறங்கும் வரை... மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது கூகுள்.

அந்த வகையில் இன்றைக்கு இணையப் பயன்பாடு என்பது பெரும்பாலான மக்களுக்கு பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக உள்ளது. அதிலும் அறிவுத்திறன்பேசிகளின் வருகைக்குப் பிறகு பொழுதுபோக்குச் செயலிகள்தான் 99 சதவீத அறிவுத்திறன்களில் அதிகம் இடம் பிடித்துள்ளன. பயன்பாட்டிலும் அவையே முன்னணியில் உள்ளன. தகவல்தொழில்நுட்பம் என்பது நாளுக்குநாள் புத்தாக்கம் பெறும் திறனுடையது என்பதே அதன் சிறப்பம்சம்.

தேடுபொறி விஷயத்தில் ஏகாதிபத்தியனாக செயல்படும் உலகப் புகழ் பெற்ற முன்னணி தேடுபொறி நாயகனான கூகுள், உலகின் வரலாற்றுச் சம்பவங்கள், முக்கிய சமூக நிகழ்வுகள், பிரபலங்களின் பிறந்த நாள், அவர்களுடைய கருத்துகள், அறிக்கைகள், அவர் குறித்து சர்ச்சைகள், விளையாட்டுப் போட்டிகள், போட்டி அட்டவணைகள், வீரர்களின் பட்டியல், விடுமுறை நாள்கள், முக்கிய நாள்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, அரசியல், தேர்தல், திரைப்படம், வானிலை நிலவரங்கள், உணவு, உடல் ஆரோக்கியம், பிரபலங்களின் திருமணம், விவாகரத்து போன்ற பல துறைகள் சார்ந்த சொற்கள் என அதிகம் தேடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், சில வேடிக்கையான தேடல்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தேடுபொறி தளங்களின் ஏகாதிபத்தியனாக செயல்படும் கூகுளில் 2025 இல் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட சொற்கள் குறித்து இதில் பார்ப்போம்...

1. ஜெமினி(Gemini)

ஏஐ என்னும் செய்யறிவு இப்போது ஒவ்வொரு நாளும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் அன்றாட வாழ்வில் அதிகரித்து வரும் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 2025 இல் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக ஜெமினி உள்ளது.

ஜெமினியின் அம்சங்கள், அப்டேட்கள் மற்றும் வேலை, கல்வி மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் அதன் நடைமுறைப் பயன்பாடுகளை அறிந்துகொள்வதற்காக அந்த வார்த்தையை அதிகயளவில் தேடியுள்ளனர்.

2. இந்தியா வெர்சஸ் இங்கிலாந்து (India vs England)

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய கிரிக்கெட் தொடர் காரணமாக, இந்தியா வெர்சஸ் இங்கிலாந்து (India vs England) என்பது அதிகம் தேடப்பட்ட சொற்களில் இரண்டாவதாக இடம் பிடித்துள்ளது.

ரசிகர்கள் போட்டிளுக்கான கால அட்டவணைகள், நேரலை மற்றும் வீரர்களின் ஆட்டத்திறன்களை உன்னிப்பாக கவனித்துள்ளனர். இவை கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் கொண்ட நாடுகளில், வலுவான உணர்ச்சிப்பூர்வமான மதிப்பைக் கொண்டுள்ளது.

3. சார்லி கிர்க் (Charlie Kirk)

அரசியல் விவாதங்கள், பொது நிகழ்வுகளில் அதிகமாக பங்கேற்றது மற்றும் ஊடகங்களில் அதிகயளவில் காணப்பட்டதன் காரணமாக சார்லி கிர்க் 2025 இல் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளார்.

சார்லி கிர்க்
சார்லி கிர்க்

மக்கள் அவருடைய கருத்துகள், அறிக்கைகள் மற்றும் அவரைப பற்றிய சர்ச்சைகள் குறித்து அதிகயளவில் தேடியுள்ளனர்.

4. கிளப் வேர்ல்ட் கப் (Club World)

2025 இல் பிபா வேர்ல்ட் கப் (FIFA Club World Cup) தொடர்பான தேடல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. கால்பந்து ரசிகர்கள் போட்டி முடிவுகள், பங்கேற்கும் அணிகள் மற்றும் போட்டி குறித்த சமீபத்திய தகவல்களைத் அதிகளவில் தேடியுள்ளனர். இந்த போட்டி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சாம்பியன் கிளப்புகளை ஒன்றிணைத்து, சர்வதேச அளவில் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

5. இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா (India vs Australia)

மற்றொரு முக்கிய கிரிக்கெட் போட்டியான "இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா" அணிகளுக்கு இடையிலான போட்டியும், அதுதொடர்பான முடிவுகளும் ஆண்டு முழுவதும் தேடலில் அதிகயளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. சிறப்பான போட்டிகள் மற்றும் உயர் அழுத்த தருணங்களுக்கு பெயர் பெற்ற போட்டிகளுக்காக தீவிரமான போட்டிகளை ரசிகர்கள் பின்தொடர்ந்தனர். இந்த போட்டி சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் பின்பற்றப்படும் ஒன்றாகத் தொடர்கிறது.

6. டீப் சீக்(DeepSeek)

புதிய செயற்கை நுண்ணறிவு தளங்களையும், தேடல் தொழில்நுட்பங்களையும் மக்கள் அதிகம் தேடியதால் டீப் சீக் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே உள்ள செயற்கை நுண்ணறிவு கருவிகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அறிவதற்காக அதிகயளவில் தேடியுள்ளனர். இந்த சொல் தேடல், செயற்கை நுண்ணறிவுத் துறையில் புதுமை மற்றும் மாற்று வழிகள் குறித்த வளர்ந்து வரும் ஆர்வத்தை எடுத்துக்காட்டுகிறது.

7. ஆசியக் கோப்பை (Asia Cup)

2025 இல் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இணையத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் போட்டி அட்டவணைகள், ஸ்கோர், வீரர்களின் பட்டியல் மற்றும் பல அம்சங்களுக்காக அதிகயளவில் தேடியுள்ளனர். இந்தப் போட்டி ஆசியாவின் சிறந்த அணிகளை ஒன்றிணைத்ததுடன், பிராந்திய விளையாட்டு நிகழ்வுகள் எவ்வாறு உலகளாவிய கவனத்தைப் பெற முடியும் என்பதையும் நிரூபித்துள்ளது.

8. ஈரான்(Iran)

சர்வதேச அளவில் ஈரானை சுற்றி நிகழும் புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்களின் ஆர்வம் காரணமாக காரணமாக, 'ஈரான்' என்ற சொல் அதிகயளவில் தேடப்பட்டுள்ளது. அந்த நாடு தொடர்பான அரசியல், சமூக மற்றும் ராஜதந்திர சூழ்நிலைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக, அந்த நாடு குறித்த தகவல்களை மக்கள் அதிகயளவில் தேடியுள்ளனர்.

ஐபோன் 17
ஐபோன் 17

9. ஐபோன் 17(iPhone 17)

ஐபோன்களுக்கென உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால்தான் ஐபோன் 17, 2025 இல் அதிகம் தேடப்பட்ட தொழில்நுட்பம் தொடர்பான சொற்களில் ஒன்றாக மாறியது.

ஐபோனை பயன்படுத்துபவர்கள் அது குறித்து கசிந்த தகவல்கள், எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி போன்றவை குறித்து அதிகயளவில் தேடியுள்ளனர்.

10. இந்தியா - பாகிஸ்தான்(Pakistan and India)

பாகிஸ்தான் மற்றும் இந்தியா என்ற சொற்கள், இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம், தூதரக நிகழ்வுகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றால் அதிகம் தேடப்பட்டுள்ளது. இந்த ஆர்வம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று தகவல்கள், அரசியல் மற்றும் விளையாட்டுத் தொடர்புகளைப் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமின்றி இது தெற்காசிய விவகாரங்கள் மீது உலகளவில் உள்ள கவனத்தையும் பிரதிபலிக்கிறது.

11. செயற்கை நுண்ணறிவு (ஏஐ)

இதனைத் தொடர்ந்து கூகுளில் அதிகம் தேடிய சொற்களில் ஒன்று “ஏஐ டூல்ஸ்”(AI Tools) ஆகும். ChatGPT, Gemini, Claude போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் வேகமாக வளர்ந்து வருவதால், பொதுமக்கள் முதல் தொழில்முறை நிபுணர்கள் வரை ஏஐ குறித்து அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், “AI jobs”, “AI learning”, “Free AI apps” போன்ற தொடர்புடைய சொற்களும் அதிக அளவில் தேடப்பட்டு உள்ளது.

12. தேர்தல் 2025

தேர்தல் 2025 (Election 2025) என்ற வார்த்தை பல நாடுகளில் ட்ரெண்டாகியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் தேர்தல் சூழல்கள் அதிகரித்ததால், வாக்காளர் பட்டியல், கட்சி அறிக்கை, வேட்பாளர் விவரம், தேர்தல் நாள் குறித்து அதிகயளவில் தேடியுள்ளனர். தமிழ்நாட்டில் "தேர்தல் தேதி 2025", "வாக்குச்சாவடி பட்டியல்", " கூட்டணி , யாருடன் கூட்டணி, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்" போன்ற சொற்கள் அதிகயளவில் தேடியுள்ளனர்.

12. வானிலை மற்றும் புயல் தொடர்பான சொற்கள்

முக்கியமான தேடல் பட்டியலில் வானிலை மற்றும் புயல் தொடர்பான சொற்களும் இடம்பெற்றன. "புயல் பாதை", "வானிலை முன்னறிவிப்பு", "மிகவும் ஆபத்தான புயல்", "டிட்வா புயல்" போன்ற சொற்கள் தமிழகத்தில் அதிகயளவில் தேடியுள்ளனர். காரணம், கடந்த சில ஆண்டுகளாக வானிலை மாறுபாடுகள் அடிக்கடி புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டதால் மக்கள் இதுபோன்ற சொற்களை அதிகயளவில் தேடியுள்ளனர்.

12. இணைய திரைப்படங்கள் (Web series 2025)

ஓடிடி-யில், "பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்", "புதிய தமிழ் படம்", இணைய திரைப்படங்கள் 2025(Web series 2025), "Hollywood releases" போன்ற சொற்களும் அதிகயளவில் தேடப்பட்டுள்ளன. குறிப்பாக பெரிய படங்கள், கதாநாயகன்களின் புதிய அறிவிப்புகள், ஓடிடி வெளியீட்டு தேதிகள் போன்ற விவரங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளனர்.

13. உடல் எடை குறைப்பதற்கான டிப்ஸ்(Weight loss tips)

சுகாதாரம் தொடர்பான தேடல்களும் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளன. "Weight loss tips", "Healthy diet", "Diabetes control", "Mental health support" போன்ற சொற்கள் அதிகயளவில் தேடப்பட்டுள்ளன. வாழ்வியல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.

14. தமிழ்நாட்டில் குறிப்பாக தேடப்பட்ட சொற்கள்

தமிழ்நாட்டில் குறிப்பாக அதிகம் தேடப்பட்ட சொற்களில் TNPSC 2025, Tamil Nadu weather today, Breaking news Tamil, Live cricket score, Pongal 2025 date, கல்வி, தொழில், வேலைவாய்ப்பு தொடர்பான சொற்களில் "Government jobs 2025","Resume format", "Work from home jobs", "Online courses" சொற்கள் அதிகயளவில் தேடப்பட்டுள்ளன.

அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள்

கூகுளில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றின் சராசரி மாதாந்திர தேடல் மதிப்பீடுகளும்...

  • என்ன பார்க்க வேண்டும்? 9,140,000

  • என்னுடைய பணத்தைத் திரும்பப் பெறுவது எங்கே? – 7,480,000 (இது வரி செலுத்துவோர் தங்கள் பணத்தை திரும்பப் பெறும் நிலை குறித்து இவ்வாறு தேடியுள்ளனர்.)

  • உங்களுக்கு அது எப்படிப் பிடிக்கும்? - 6,120,000

  • எனது ஐபி முகவரி என்ன? - 4,090,000

  • ஒரு கோப்பை எத்தனை அவுன்ஸ்? – 2,740,000

  • இப்போது மணி என்ன? – 1,830,000

  • மேக்கில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி? – 1,830,000

  • இது என்ன பாட்டு? - 1,500,000

  • நான் எங்கே இருக்கிறேன்? – 1,500,000

  • வேகமாக உடல் எடையைக் குறைப்பது எப்படி? 1,500,000

  • சூரியன் மறையும் நேரம் என்ன? - 1220,000

  • இது என்ன எழுத்துரு? - 823,000

  • கலிஃபோர்னியாவில் இப்போது நேரம் என்ன? - 673,000

  • காதல் பேசும் 5 மொழிகள் என்னென்ன?- 550,000

  • நீங்கள் என்ன செய்வீர்கள்? - 550,000

இதேபோன்று, கூகுளில் 'யார்?, ஏன்?, எங்கே?, எப்போது?' என்று பல வேடிக்கையான கேள்விகளையும் கேட்டிருக்கின்றனர்.

நான் யார்?, நீ யார்?, நாய்களை வெளியே விட்டது யார்?, என்னை அழைத்தது யார்?, உலகின் மிகப் பெரிய பணக்காரர் யார்?, என்னை இளவரசியாக்கியவர் யார்?, அல்காட்ராஸில் இருந்து தப்பித்தவர் யார்?, கூகுள் யாருக்கு சொந்தம்?, இன்று இறந்தவர் யார்?, நாம் ஏன் செய்யக்கூடாது?, பெண்கள் ஏன் கொலை செய்யப்படுகிறார்கள்?, நீங்கள் ஏன் எப்பவும் சோர்வாகவே இருக்கிறீர்கள்?, வான் நீலமாக இருப்பது ஏன்?, ஏன் கூடாது?, இன்று கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுவது ஏன்?, நீ எங்கே இருந்தாய்?, நான் இப்போது எங்கே இருக்கிறேன்?, நான் மகிழ்ச்சியை எங்கே காண முடியும்?, அடுத்த முழு நிலவு எப்போது?, இன்று விடுமுறையா?, உனக்கு அது எப்படி பிடிக்கும்?, உங்க அம்மாவை நான் எப்படி சந்தித்தேன்?, எப்படி இருக்கிறீர்கள்?, ஐரோப்பா ஒரு நாடா?, கூகுள் வேலை செய்யவில்லையா?, புளூட்டோ ஒரு கிரகமா?, இன்று மழை பெய்யுமா?, ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?, இன்று வங்கிகள் திறந்திருக்குமா?, சைனஸ் தொற்றக்கூடிய தொற்றா?

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் கூகுள் தேடுபொறியில் முக்கிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் முக்கியமான புவிசார் அரசியல் நிகழ்வுகள், மக்களின் வாழ்க்கை முறை, உணவு முறைகள், உடல்நலம், அன்றாடத் தேவைகள், பொழுதுபோக்கு வரை மக்கள் எந்தெந்த துறைகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதை இந்த தகவல்கள் தெளிவுப்படுத்துகின்றன.

Summary

Year Ender 2025: The most searched words on Google

2025!  கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்கள்!!
2025: அதிர வைத்த கொலைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com