காலம் எப்போதுமே இனிப்பாக இருந்துவிடுவதில்லை. குற்றங்களும் கொலைகளும்கூட தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான காரணம். இவற்றுக்கெல்லாம் 2025 ஆம் ஆண்டும் விதிவிலக்கல்ல. குறிப்பிடும்படியான கொலைச் சம்பவங்கள்; இந்த சமுதாயத்தைப் பிடித்துள்ள நோய்மையை அம்பலப்படுத்தும் எடுத்துக்காட்டுகள்.
முக்கியமான சிலவற்றைப் பற்றி இங்கே:
காளி.. காவலாளி.. காவலர்!
சிவகங்கை, மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் திருட்டுப் புகார் தொடர்பாக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணையின்போது அடித்தே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கின் விசாரணை, இன்றளவிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்தப் படுகொலையில், புகார் அளித்த பெண் தொடங்கி தலைமைச் செயலகத்தில் யாரோ ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக எங்கெங்கோ சென்ற வழக்கு, இன்றைய பல வழக்குகளில் ஒன்றாக மாறியதும் அறிந்ததே.
காவல்துறையால் பலி கொடுக்கப்பட்ட அஜித் குமாருக்கு ஈடாக, அவரின் தம்பிக்கு அரசு வேலையும், நிலமும் வழங்குவதாக அரசு அறிவித்தது. எப்போதும் போல இனியொரு சம்பவம் இதுபோல நடக்காது; நடக்கக் கூடாது என்று மாமூலான அரசியல் ஆறுதலை ஆளும், ஆள முயலும் கட்சிகளும் வெளிப்படுத்தின.
சாதி... காதலுக்கும் கேடு!
சாதிதான் சமூகம் என்றால் - வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்ற அம்பேத்கரின் வாய்மொழி பலித்திருந்தால், நாட்டின் பெரும் பகுதி காணாமல்போன ஒன்றாகியிருக்கும்.
2019 முதல் 2023 இடையிலான ஐந்தாண்டுக் காலத்தில் தமிழ்நாட்டில் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் 68 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று எத்தனை பாரதிகள் வந்தாலும் சரி, வாழ்வு நிலையில்லாதது என உணர்த்த எத்தனை சுனாமிகள் வந்தாலும் சரி - நாட்டின் நிலை என்னவோ மாற மறுப்பதுதான் உண்மை.
நெல்லையில் வேற்று சாதிப் பெண்ணைக் காதலித்ததாகக் கூறி, மென்பொறியாளர் கவினை, காதலியின் குடும்பத்தினரே வெட்டிக் கொன்றதாக வழக்கு.
இந்தக் காலத்துல யாருங்க சாதி பார்க்குறாங்க? என்ற பொய்ப் பிம்பத்தை உடைப்பதாகவே இந்தப் படுகொலை இருந்தது. ஆம், கவினைக் கொலை செய்ததாகக் கூறப்படுபவர் பெண்ணின் சகோதரரான விளையாட்டு வீரர், தொடர்புடையதாகக் கூறப்படும் மற்ற இருவரான பெண்ணின் பெற்றோர் காவல் அதிகாரிகள்.
இந்த மாதிரியான சாதி சார்ந்த சம்பவங்களில் தீவிர நடவடிக்கை எடுத்தால் பெரும் பாதிப்பு என்று கருதியோ என்னவோ, ஆளுங்கட்சி என்றாலும் எதிர்க்கட்சி என்றாலும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட முயலுவதில்லை போலும். சாதியை வைத்து அரசியல் செய்யும் வரையில், சாதிப் படுகொலைகளும் உயிரோடுதான் இருக்கத்தாான் செய்யும். எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரையில், நடக்கக் கூடாதது நடந்துருச்சுமா என்ற வசனங்களும் நடப்பில்தான் இருக்கும்.
வரதட்சிணையாக உயிர்! போதுமா?
திருப்பூரில் வரதட்சிணையை மட்டுமே முழுமூச்சாய்க் கொண்டிருந்த கவின்குமார் என்பவர், ஏப்ரல் 11 ஆம் தேதியில் ரிதன்யாவை மணந்தார்.
இந்த மணப் பந்தலில் கவின்குமார் கோரியபடி, 300 பவுன் நகை, ரூ. 60 லட்சத்தில் கார், திருமணத்துக்கான செலவு ரூ. 6 கோடி என ரிதன்யாவின் வீட்டினர் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இத்தனையும் போதாமல் மாப்பிள்ளை வீட்டார், ரிதன்யாவிடம் மேலும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தினராம்.
இதனால், தன் பிறந்த வீட்டைத் துன்புறுத்த நினையாத ரிதன்யா, திருமணமான 78-வது நாளில் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.
ரிதன்யாவின் உயிரிழப்பு, தற்கொலை எனச் சுட்டப்பட்டாலும் அனைவருக்கும் தெரியும் - கிட்டத்தட்ட இது கொலையைப் போலதான். ரிதன்யாவின் திருமண பந்தமோ வெறும் 78 நாள்கள்தான்; ஆனால், அவரின் கொலை வழக்கோ 170 நாள்களைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.
சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை! மது - மரணம்
திருப்பூர், சிக்கனூத்து பகுதியில் மதுபோதையில் இருந்த மூவர் மோதலில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட தொலைபேசிப் புகாரையடுத்து, சம்பவ இடத்துக்கு குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சென்றார்.
ஆனால், மோதலில் ஈடுபட்டிருந்த தந்தை மூர்த்தி, அவரின் இரு மகன்களான தங்கப் பாண்டியன், மணிகண்டன் இடையேயான பிரச்னையைத் தீர்க்க முயன்ற சண்முகவேலை மூவரில் ஒருவர் வெட்டிக் கொன்றுள்ளார்.
சண்முகவேல் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மூவரையும் கைது செய்து, தப்பியோட முயன்ற மணிகண்டனை என்கவுன்டரும் செய்தனர்.
இந்த மூவருக்குள்ளான பிரச்னைக்கும், சண்முகவேல் கொலைக்குமான பிரச்னைக்கும் மூலகாரணம், மதுபோதைதான்.
2025 ஆம் ஆண்டின் தீபாவளி திருநாளையொட்டிய 3 நாள்களில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 789.85 கோடிக்கு மது விற்பனை அமோகம். மது ஒழிப்பு மீதான அரசின் மெத்தனம், இன்னும் எத்தனை உயிர்களைக் கேட்குமோ?
கரூர் பலி! மக்களும் மந்தை மனநிலையும்!
கரூரில் செப். 27 ஆம் தேதியில் முன்னாள் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் தேர்தல் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்தக் கூட்ட நெரிசல் பலிக்கு சரியான திட்டமின்மை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்பட ஆளும் அரசின் மீதும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
இத்தனை பேர் வருவர் எனத் துல்லியமாகக் கணிக்காவிட்டாலும், நிறையே பேர் வருவர் என்ற அடிப்படைக் கணிப்புக்கூட இல்லாத சில முதியோர்கள், சில பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடனும் சென்றனர். இவர்களின் மீது குற்றம் சுமத்த முடியாதெனினும், இன்னமும் இதே தவறைத்தான் செய்கின்றனர்.
41 பேரை பலிகொண்ட இந்தச் சம்பவத்தின் இறுதியிலோ - மாறிமாறிப் பழிபோட்டுக் கொண்டும், மாறிமாறி இழப்பீடுகளையும்தான் வழங்கினர்.
சமீபத்தில்கூட, விஜய்யின் ஈரோடு பிரசாரக் கூட்டத்தில் ஸ்பீக்கர் கம்பத்தின் மீதேறி கவன ஈர்ப்பு என்ற பெயரில் ஏதேதோ செய்த ஓர் இளைஞர், விஜய்யை பார்த்தே தீருவேன் என்று 9 மாதக் குழந்தையுடன் பேட்டியளித்த தாய், விஜய்க்கு வாக்களிக்காத தன் குடும்பத்தினருக்கு விஷம் வைத்து விடுவேன் என்று சொல்லும் ஓர் இளம்பெண் - இவர்களுக்கெல்லாம் தலைவர் தேவையில்லை. டிவி-யிலோ சமூக ஊடகங்களிலோ லாயக்கில்லாத சிறு அங்கீகாரம்தான்.
ஆர்சிபி கொண்டாட்டம், கரூர் சம்பவம், நடிகைகளான நிதி அகர்வால் மற்றும் சமந்தாவை காண நெருக்கியடித்த 'வெறிகொண்ட' ரசிகர்கள்.
சொத்து.. தகராறு... தலை துண்டிப்பு
சொத்துத் தகராறில் தந்தையின் இரண்டாவது மனைவியை ஓட ஓட விரட்டி, தலையைத் தனியாகத் துண்டித்ததும் இங்குதான் - பட்டுக்கோட்டையில்!
மதுரையில் பாஜக நிர்வாகியாக இருந்த சரண்யாவை, சொத்துத் தகராறில் மூவர் கொலை செய்துவிட்டு, நீதிமன்றத்தில் சரணும் அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் சொத்துதான் மூலகாரணமா என்றால், அதிலும் சந்தேகம் எழுகிறது.
ஏனெனில், கொலை செய்தால் - இருக்கும் சொத்தைக்கூட அனுபவிக்க முடியாமல் போய்விடுமே என யோசிக்காமலா இருப்பார்கள்?
அரசின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துப் பலிகளும் ஒருவகையில் கொலைதான்.
திருவள்ளூரில் அரசுப் பள்ளியின் சுவர் இடிந்து ஏழாம் வகுப்பு மாணவன் பலி, கடலூரில் அரசுப் பேருந்தின் டயர் வெடித்து 9 பேர் பலி என நிர்வாக அலட்சியத்தால் நிகழும் விபத்துகளும் கொலைகள்தான்.
ஆனால், இந்த துர்சம்பவங்களின் முடிவில் - காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை, இழக்கப்பட்டவருக்கு இரங்கல்கள், இழப்பீடுகள் என்ற அறிவிப்புகளில் மட்டும் வேகம்காட்டும் அரசு, துர்சம்பவங்கள் நிகழும் வரையில் காத்திருத்தலைத் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு கொலையின்போதும், எதிர்க்கட்சிகளோ பொதுமக்களோ கேள்வி எழுப்பினால், முந்தைய ஆட்சியுடனான ஒப்பீட்டைத்தான் அனைத்து ஆளுங்கட்சிகளும் முன்வைக்கின்றன. தவிர, இனியொரு கொலையைத் தமிழகம் காணாது என்று எந்தவோர் உத்தரவாதத்தையும் எந்தவோர் ஆளும் அரசும் தருவதில்லை.
உணர்ச்சிகள்தான் கொலைகளுக்குக் காரணம் என்று ஏற்கத்தகாத காரணமொன்று கூறப்பட்டாலும், வழக்குகளில் காலந்தாழ்த்தும் நீதித் துறையும் அரசும் முக்கிய காரணகர்த்தாக்களாக இருக்கின்றனர். பகுத்தறிவு பெற்ற சில மனிதர்களும் விலங்குகளாக மாறிவிடுகின்றனர்.
ஆகையால், அரசும் ஆறறிவு பெற்ற நாமும் இனிவரும் புத்தாண்டுகளைக் கொலைகள் ஏதுமில்லாத அனைவருக்குமான புனித ஆண்டுகளாக மாற்றுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.