

உலக வரலாற்றில் போராட்டம் என்பது புதிதல்ல. மறுக்கப்படும் கோரிக்கை அல்லது பறிக்கப்படும் உரிமையை அதிகாரத்திடமிருந்து கேட்டுப் பெறுவதற்கான வழியாக அமைகின்றன போராட்டங்கள்.
போராட்டக் களமே பல தலைவர்களை அடையாளம் கண்டு சமூகத்திற்கு கொடுத்துள்ளது. தற்போது ஆட்சிபுரிபவர்களும் பல போராட்டங்களைச் செய்து ஆட்சிக்கு வந்தவர்களே. ஆனால், உரிமைகள் பறிக்கப்படும்போது ஆட்சிக்கு எதிராகவே அந்தப் போராட்டம் உருவெடுக்கிறது.
போராட்டம் என்பது தவறானது அல்ல, சட்ட விதிகளுக்குள்பட்டு ஒவ்வொரு நாட்டிலும் போராட்டம் நடத்த வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் போராட்டங்கள் நிறைந்ததாகவே கடந்துள்ளது 2025. தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை முதல் அண்டை நாடான நேபாளத்தில் தலைமையின்றி நடந்த ஜென் ஸி கோரிக்கைகள் வரை பல போராட்டங்களை இந்த ஆண்டு கடந்து சென்றுள்ளது...
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
இந்த ஆண்டில் மிகவும் கவனம் ஈர்த்தது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்தான். சென்னை மாநகராட்சியின் 5, 6வது மண்டலங்களின் தூய்மைப் பணியைத் தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக. 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த போராட்டத்தின் 13 வது நாளில், அவர்களை அதிரடியாக நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
அதுவரை பலகட்ட பேச்சுவார்த்தைக்கு முன்வந்த அரசு, பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தியது. இதற்கு நீதிமன்ற உத்தரவைக் கேடயமாக்கிக்கொண்டது அரசு.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணிகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய 5 மண்டலங்களில் ராயப்பேட்டை, திருவிக நகர் ஆகிய இரு மண்டலங்களின் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குவிட அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த்து தொடங்கிய போராட்டம், 130 நாள்களுக்கு மேலாகவும் தொடர்ந்து வருவது வேதனை.
சாம்சங் ஊழியர் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடந்துவந்த ஊழியர்களின் போராட்டம் இந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது.
தென் கொரியாவைத் தவிர வேறு எந்த நாட்டில் உள்ள சாம்சங் ஆலைக்கும் தொழிற்சங்கம் இல்லை. இந்தியாவில் நொய்டாவிலும், சுங்குவார்சத்திரத்திலும் சாம்சங் நிறுவனத்துக்கு ஆலைகள் உள்ளன. சட்டப்போராட்டம் நடத்தியதன் விளைவாக சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஆலையில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. இதனால் ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் நிர்வாகம் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்கேற்ப விதிமீறலில் ஈடுபட்டதாக 23 தொழிற்சங்க ஊழியர்கள் (தொழிற்சங்கம் அமைய காரணமாக இருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது) மார்ச் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலை வளாகத்தில் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊதியப் பிடித்தமும் செய்யப்பட்டது. இதனிடையே நடத்தப்பட்ட 11 கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நீடித்ததால் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளுமாறு ஊழியர்கள் தரப்பில் கோரப்பட்டது. ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் எழுத்துப்பூர்வமாக நிர்வாகம் பதில் அளித்ததால், ஊழியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பினர்.
எண்ணூர் போராட்டம்
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்டோபரில் சாரம் சரிந்து விழுந்து வட மாநிலத் தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகு உரிய பணி பாதுகாப்பு வழங்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.
எண்ணூரிலுள்ள கோரமண்டல் உர ஆலையில் இருந்து அம்மோனியா வாயு கசிவு மற்றும் சிபிசிஎல் ஆலையில் இருந்து எண்ணெய் கசிவு போன்ற நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ஆலையை மூடவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கோரியும் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்தனர். 2023 ஆம் ஆண்டு முதலே ஆலையை மூடக் கோரிய மக்களின் போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருகிறது. இதற்கான தீர்வை 2026 கொடுக்கட்டும்.
கவின் ஆணவக்கொலை போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை 27 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துவந்ததால், கவினை காதலியின் சகோதரர் சுர்ஜித் வெட்டிப் படுகொலை செய்தார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆணவக் கொலையில் சுர்ஜித்தின் பெற்றோரும் சார்பு ஆய்வாளர்களுமான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கு தொடர்பு இருப்பதால் அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி கவினின் உடலைப் பெற மறுத்து 5 நாள்களாக அவரின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சுர்ஜித்தின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. யாரும் எதிர்பாராத புதிய திருப்பமாக, கொலை நடந்த இடத்தில், சுர்ஜித்தின் தந்தையும் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்னும் என்னென்ன திருப்பங்கள் காத்திருக்கின்றனவோ? இந்த ஆணவக் கொலையில் நீதிக்கான சட்டப் போராட்டம் தொடர்ந்து வருகிறது...
மாணவிக்கு நீதி கோரி போராட்டம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் (டிச. 23, 2024) பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இந்த ஆண்டின் மறக்க முடியாத வடுக்களில் ஒன்றாக மாறியுள்ளது. கடந்த ஆண்டில் இச்சம்பவம் நடந்திருந்தாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதற்காக எழுந்த போராட்டக் குரல்கள் அதிகம்.
இந்த விவகாரத்தில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இந்தத் தீர்ப்பு கிடைப்பதற்கு முன்பு பல்வேறு கட்ட போராட்டங்கள் சென்னை உள்பட தமிழ்நாடு முழுக்க நடைபெற்றது.
ஞானசேகரனுக்கு பின்னால் அதிகார பலம் கொண்டவர்கள் இருப்பதாகத் தெரிவித்து, யார் அந்த சார்? என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. யார் அந்த சார்? என்ற முழக்கத்தை முன்வைத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டி, பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
ராஜஸ்தான் விவசாயிகள் போராட்டம்
ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டத்தில் ஆசியாவிலேயே மிகப் பெரிய எத்தனால் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ரூ. 450 கோடியில் அமையவுள்ள இந்த ஆலையில் இருந்து எத்தனால் பிரித்தெடுக்கப்படவுள்ளது. மத்திய அரசின் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்திற்கு இந்த ஆலை முக்கியப் பங்காற்றும்.
ராஜஸ்தானின் பாலைவனத்தில் அமைந்தாலும்கூட பரவாயில்லை, ஆனால், பசுமையான விவசாய நிலப் பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு ராஜஸ்தானில் பஞ்சாப் எல்லையையொட்டி இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இந்த ஆலை அமைந்தால், விவசாய நிலம் பாதிக்கப்படும், நிலத்தடி நீர், கால்நடை வளர்ப்பு ஆகியவை பாதிக்கக் கூடும் என கடந்த ஓராண்டாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், விவசாயிகளின் போராட்டத்தையும் மீறி ஜூலையில் கட்டுமானப் பணிகளை ஆலை நிர்வாகம் தொடங்கியது.
விவசாயிகள் ஒன்றுதிரண்டு குரல் கொடுத்ததால், நவம்பர் வரையில் கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. இருந்தபோதும் போராட்டத்திற்கு முக்கிய காரணமான விவசாய சங்கத் தலைவர்களை காவல் துறை கைது செய்தது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் டிசம்பர் 10ஆம் தேதி ஆலையை நோக்கி பேரணியாகச் சென்று மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆலையின் சுவர்களை இடித்து தீயிட்டு கொளுத்தினர்.
நிலைமை எல்லை மீறியதால் விவசாயிகளை நோக்கி தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி காவல் துறையினர் போராட்டத்தை கலைத்தனர். விவசாயிகள் தரப்பிலிருந்து காவல் துறையின் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. காவல் துறையின் 14 வாகனங்கள் தீக்கிரையாகின. காவல் துறை தாக்கியதில் பெண்கள் உள்பட 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
நிலைமை மோசமானதால் அப்பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. கல்வி நிலையங்களுக்கு விடுமுறை; சந்தைகளும் மூடப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அரசால் கொண்டுவரப்பட்ட எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்கும் (E20 பெட்ரோல்) திட்டமானது முழுக்க முழுக்க அதானி – அம்பானி நலனை மையப்படுத்திய, விவசாய விரோத, சுற்றுச்சூழல் விரோதத் திட்டம் என்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மின்சார, விதைகள் மசோதாவுக்கு எதிரான போராட்டம்
மின்சார சட்டத் திருத்த வரைவு மசோதா 2025, விதைகள் வரைவு மசோதா 2025 என இரு மசோதாக்களை நவம்பர் 13ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த இரு மசோதாக்களும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, கார்ப்பரேட்டுகளுக்கே சாதகமான சூழலை உருவாக்கும் என விவசாயிகள் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, பஞ்சாப் மாநில விவசாயிகள் இந்தப் போராட்டத்தை தீவிரமாக எடுத்துச்சென்றனர். மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதாவால், விவசாயிகள் பலன் பெற்று வரும் மானிய மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்சாரத் துறையில் தனியார் நுழைய வழிவகை செய்யும் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிச. 5 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிச. 8 ஆம் தேதியன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையில் விவசாயிகள் நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் மசோதாவின் நகல்களை எரித்து எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
2021 - 2022-ல் தில்லி எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், மசோதாக்களின் பெயரை மாற்றி மீண்டும் அந்த விதிகளை மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கிறது என்பதே விவசாய சங்கத் தலைவர்களின் எதிர்ப்பாக உள்ளது.
வக்ஃப் மசோதா: நாடு தழுவிய போராட்டம்
மக்களவையில் ஏப்., 3 ஆம் தேதி வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமியர்களின் சொத்துகளை சட்டப்படி பறிக்க பாஜக அரசு முயற்சிப்பதாகக் கூறி, இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு சட்டப்பேரவைக்குச் சென்றனர். இச்சட்டத்துக்கு எதிராக ஏப்., 22 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் தந்திருக்கக் கூடிய உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்தோடு இச்சட்டம் இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு முழுக்கக் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
திரிபுரா, அஸ்ஸாம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள், தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, விஜயவாடா, ராஞ்சி, லக்னெள உள்ளிட்ட நகரங்களிலும் பெரிய அளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜென் ஸி போராட்டம்
3 கோடி மக்கள் தொகை கொண்ட நேபாளத்தில் இதுவரை இல்லாத வகையில் முழுக்க முழுக்க இளம் தலைமுறையினரால் (ஜென் ஸி) முன்னெடுக்கப்பட்ட போராட்டம், ஆட்சியையே கவிழ்த்து, அந்நாட்டின் அதிகார அமைப்பையே மாற்றியமைத்துள்ளது.
ஊழல், வேலையின்மை, சமூக வலைதளச் செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்தவொரு தலைமையும் இல்லாமல், ஜென் ஸி தலைமுறையினர் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப். 4 ஆம் தேதி சமூக ஊடக செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்து தொடங்கிய போராட்டம் 4 வது நாளில் செப். 8 ஆம் தேதி வன்முறையாக மாறியது.
இதில், அரசுக் கட்டடங்கள், வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் சர்மா ஓலி தனது பதவியையே ராஜிநாமா செய்தார். நேபாளத்தின் இளைஞர்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கே வேலைக்குச் செல்கின்றனர். நேபாளத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். இதனால், பலர் சமூக வலைதளங்களை நம்பியே வாழ்வாதாரத்தை கட்டமைத்துள்ளனர்.
நாட்டில் நிலவும் இத்தகைய சூழலில் சமூக வலைதள செயலிகளுக்கு அரசு தடை விதித்ததால், அடக்கி வைத்திருந்த அழுத்தமே அரசைக் கவிழ்க்கும் அளவுக்கு ஜென் ஸி தலைமுறையினரை வெகுண்டெழச் செய்ததற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
வங்கதேச வன்முறை
அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதால், கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டே விரட்டப்பட்டார். அவர் தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை ஒப்படைக்கக் கோரி வங்கதேசத்தில் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ள முகமது யூனுஸ் தலைமையிலான அரசு கோரி வருகிறது.
ஷேக் ஹசீனா மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை வங்கதேச அரசு சார்பில் தொடர்ந்து வருகிறது. இதனிடையே வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதற்கு காரணம், ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த இன்குலாப் மஞ்சா என்ற மாணவர் இயக்கத்தின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதே ஆகும்.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதால், எந்தவித அச்சமுமின்றி தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை ஷெரீப் உஸ்மான் தெரிவித்து வந்தார். வங்கதேச தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அறிவித்து நேரடி தேர்தல் அரசியலிலும் இறங்கினார். வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே டாக்காவில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார்.
மக்களிடையே வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த நபரால் ஷெரீப் உஸ்மான் ஹாடி துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில், அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மரணமே மீண்டும் வங்கதேசத்தில் வன்முறைக்கு காரணமாகியுள்ளது.
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு முறையான பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டதாகக் கூறி மீண்டும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைப் பேசியவர் சுட்டுக்கொல்லப்பட்டதால், வங்கதேசத்திலுள்ள இந்திய தூதரகங்களை முற்றுகையிட்டும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். துணைத் தூதரகங்கள் முற்றுகை, இந்திய தூதரக அதிகாரிகளின் வீடுகள் முற்றுகை என வன்முறை பெரிதானது. கல்வீச்சு, வீடுகளுக்கு தீ வைப்பது, அரசு வாகனங்களை கொளுத்துவது என வன்முறையால் வங்கதேசம் மீண்டும் நிலைகுலைந்துவிட்டது.
இப்படியாக ஒவ்வொரு மாதமும் போராட்டங்கள் நிறைந்ததாகவே கடந்துள்ள 2025, இதற்கான தீர்வுகளை 2026 வழங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.