திருத்தணி சம்பவம்! யார் இந்த பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்குவது?

அதிகரிக்கும் போதை மற்றும் ஆயுத கலாசாரம் குறித்து...
தாக்குதலில் ஈடுபட்டபோது...
தாக்குதலில் ஈடுபட்டபோது...
Updated on
4 min read

திருத்தணியில் வடமாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டப்பட்ட நிகழ்வு இந்தியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முன்னேறிக்கொண்டிருக்கிற அழகைப் பார்க்க, அரசே பெரிய விழாக்களை எடுக்கிறது. தமிழகம் அதில் சிறந்தது, இதில் சிறந்தது என ஒவ்வோர் ஆண்டும் விதவிதமான நிகழ்ச்சிகள்; கலந்துகொள்பவர்களின் அனுபவங்கள், கண்ணீர்கள் என ஒரு நெகிழ்ச்சியான அரசு செயல்படுவதாக அண்டை மாநிலங்கள் கருதுகின்றன.

ஆனால், பாதுகாப்பில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை சொந்த மக்களே முகம் சுழிக்கிற, ஆதங்கப்படுகிற நிலைமையில்தான் இருக்கிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை நாளும் நாளும் ஏதாவது குற்றச்செயல்கள். அடிதடி, மிரட்டல்கள் எனச் சந்தித்து வந்த காவல்துறை, இன்று சாதாரணமாக கொலைகளையும், பாலியல் வன்கொடுமைகளையும் விசாரித்து வருகிறது.

சென்னையைப் போன்ற பெரும் நகரங்கள் மட்டுமல்லாமல் மிகச் சிறிய கிராமங்களில்கூட வன்முறைப் போக்குகள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து செய்திகளையும் சமூக வலைதளங்களையும் கவனிப்பவர் கவனிக்கலாம். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது திமுக அரசு.

சில நாள்கள் முன் நடந்த திருத்தணி தாக்குதல் சம்பவம். நான்கு சிறார்கள் (இவர்களா சிறுவர்கள்? சட்டம் அப்படித்தான் சொல்கிறது, விடியோவைப் பார்த்த ஒருவர்கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள்!) போதையில் வடமாநில இளைஞரை சர்வசாதாரணமாக வெட்டும் அந்தக் கொடூர விடியோ இணையத்தில் வெளியானது. ஒரு சில நொடிகள்கூட நம்மால் காண முடியாத அளவிற்கு வன்முறை வெறியாட்டத்தை மிகச் சாதாரண மனநிலையில், மிக இயல்பாகச் செய்வதுபோல செய்கின்றனர். பல வெட்டுகளை வாங்கிய அந்த வடமாநில இளைஞர் வலி தாங்காமல், உடல் ஒத்துழைக்காமல் அங்கேயே மயங்கிச் சரிகிறார். வெட்டியவர்களோ இதனால் காவல்துறையிடம் மாட்டிக்கொள்வோம் என்பதையோ நம் வாழ்க்கை சீரழியும் என்பதையோ நினைத்துப் பார்க்கும் சிந்தனைத் திறன் கொண்டவர்களாகக்கூட இல்லை. ‘கிசா’வாக (போதையில்) வந்தார்கள்; வெட்டினார்கள் என்பது மட்டுமே அவர்களுக்கான மனநிலை.  இந்த சம்பவத்தில் மாட்டிக்கொண்டார்கள். இதுதவிர, இதற்கு முன் எத்தகைய மோசமான செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்?

சிறார்கள் மிக இளவயதில் வன்முறைகளின் வழியாக மெல்ல மெல்ல குற்ற உலகிற்குள் நுழைகின்றனர். பின், சிறைவாசம்; மீண்டும் வன்முறை உலகம் என சுழன்றுகொண்டே இருக்கின்றனர். இந்தச் சிறார்களையெல்லாம் கூர்நோக்கு இல்லங்கள் திருத்திவிடுமா? திருத்தாது என ஓய்வுபெற்ற சிறைத்துறை அதிகாரிகளே நேர்காணல்களில் சொல்லும் அளவிற்கே இன்று சிறைச் சூழல்கள் இருக்கின்றன. அங்கு போதைப்பொருள் புழங்குவதையும் தடுக்க முடியாது என்றும் குறிப்பிடுகின்றனர். இதை நேர்மையென எடுத்துக்கொள்வதா இல்லை நம்முடைய சிறைச்சாலைகள் திணறிக்கொண்டிருக்கின்றன என்பதாக எடுத்துக்கொள்வதா? இந்த பட்டா கத்தி பாய்ஸ் அங்கு அனுப்பப்பட்டால் மட்டும் திருந்துவார்கள் என எப்படி நம்ப முடியும்? 

இவர்களையெல்லாம் பள்ளியில் ஆசிரியர் திருத்த வேண்டியதுதானே? என்கிறார்கள். இன்றைய சிறார்களை நிச்சயம் ஆசிரியர்களால் திருத்தவோ நெறிப்படுத்தவோ இயலாது என்பதை அனைவரும் அறிவர். நிலைமை அந்த அளவிற்கு இருக்கிறது. ஆசிரியர், பேராசிரியர் யாரையும் மதிக்காத மிகப் பெரிய கூட்டமே உருவாகியிருக்கிறது. அறம் போதிக்க ஆசிரியர்கள் தயாராக இருந்தால்கூட மாணவர்கள் அதற்கு எதிரான விதண்டாவாத மனநிலையிலேயே இருக்கின்றனர். வகுப்பறையில் மது அருந்தும் அளவிற்கு மாணவிகளே வந்துவிட்ட சூழலில் மாணவர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்? (ஆசிரியர்கள் பற்றித் தனியே விவாதிக்க வேண்டும்).

சரி, வீடு தான் நீதி, நியாங்களைச் சொல்லி வளர்க்க வேண்டுமென்றாலும் சமூக வலைதளங்களின் பயன்பாடு உச்சத்தை அடைந்திருக்கிற இந்தக் காலத்தில் எந்தப் பெற்றோரின் பேச்சைப் பிள்ளைகள் கேட்கிறார்கள்? அதிகபட்சம் அவர்களின் கண்பார்வை செல்லும் தூரம் வரை அமைதி காக்கிறார்கள். வெளியே, பள்ளி, கல்லூரி, சமூகம் என அவர்களுக்கான வலைகள் பல்லாயிரம் ஓட்டைகளுடன் திறந்துகிடக்கின்றன. கும்பல் மனநிலையில் என்ன செய்தாலும் யாரும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்கிற மனப்பான்மையுடன் முதிரா இளம் பருவத்திற்கே உண்டான திமிருடன் எப்போதும் யாரை வெட்டிச் சாய்த்து இன்ஸ்டாகிராமில் விடியோவாக வெளியிடலாம் என்பதிலேயே சிலர் மும்முரமாகவும் இருக்கின்றனர். வட மாநில இளைஞரான சுராஜை வெட்டியவர்களிடம் கைப்பற்றிய ஆயுதங்களை அவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்ததாகவே காவல்துறை அதிகாரி கூறுகிறார். 

ஒவ்வோர் ஆண்டும் சென்னையின் சில குறிப்பிட்ட கல்லூரி மாணவர்கள் பேருந்து நாள் விழாவைக் வன்முறைத்தனத்துடன் கொண்டாடுவது, புறநகர் மின்சார ரயில்களில் பட்டா கத்திகளுடன் ஏறி அமைதியாக வீடு திரும்பிக்கொண்டிருக்கும் பலருக்கும் உயிர் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கத்திகளைச் சுழற்றுவது, நடைமேடை தரைகளில் தேய்த்து தீப்பொறி பறக்க விடுவது, கானா பாடல்கள் என்கிற பெயரில் ஆபாசமான வார்த்தைகளை நிரப்பி முகம் சுளிக்க வைப்பது என எல்லா கீழ்த்தர செயல்களிலும் மாணவர்கள் ஈடுபட்டுக்கொண்டே இருக்கின்றனர். இந்த விடியோக்கள் ஆண்டுதோறும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்களில் வெளியாகி லட்சங்களில் விரும்பவும்படுகிறது. காவல்துறையோ அரசோ இதற்கு முடிவு கட்டினார்களா? முடிவு கட்ட முனைந்தார்களா? நிச்சயமாக இல்லையென்றுதான் நடக்கிற குற்ற நிகழ்வுகள் நமக்குச் சொல்கின்றன. 

பட்டா கத்திகள்
பட்டா கத்திகள்

திருத்தணி சம்பவத்தில் கைதானவர்களில் முதன்மையாக வெட்டியவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க பட்டா கத்தியை விதவிதமான கானா பாடல்களுக்கு சுழற்றும் விடியோக்களே அதிகம் தென்படுகின்றன. ஒவ்வொரு வரியும், வன்முறையில் மிதக்க வைப்பவை. அதிலும், மது பாட்டிலை ராவாக குடித்தபடி கத்தி காற்றைக் கிழிக்கிறது. இதுபோக, ஆண்டுக்கணக்கில் ரீல்ஸ் எடுக்கப்பட்ட ஐடி-கள் கூட கண்ணில் படுகின்றன. நம்முடைய உளவு அமைப்புகள் இவற்றையெல்லாம் கண்டுகொள்கின்றனவா இல்லையா? நெல்லையில் கவின் ஆணவப் படுகொலையில் கைதான நபரும் பட்டாக் கத்திகளுடன் விதவிதமாக போஸ் கொடுத்த ஆள்தான். அதற்கு முன் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. உயிர் போனதற்குப் பின்பே இப்படிப்பட்ட வன்முறையாளன் இருந்திருக்கிறான் என்பது பலருக்கும் தெரிய வருகிறது. முளையிலேயே கிள்ள முடியாத பலமற்ற நிர்வாகங்களையா நாம் வைத்திருக்கிறோம்? ஒவ்வொரு ஊரின் காவல்துறையும் கண்காணிப்பில் முறையாகச் செயல்பட்டாலே தமிழகம் முழுவதும் இந்த ரீல்ஸ் பேர்வழிகளை எளிதாக அடையாளம் காணலாம், எச்சரிக்கை விடுக்கலாம். தேவைப்பட்டால் கைதும் செய்யலாம்.

கோவை விமான நிலையப் பகுதியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கு பின்னணியில் குற்றவாளிகள் போதையில் இருந்தது பெரிய காரணமாக வைக்கப்பட்டது. வட மாநில இளைஞரை வெட்டியவர்களும் போதையடிமைகளாகவே தெரிகின்றனர். ஆனால், இல்லை என்கிறார் காவல்துறை உயர் அலுவலர்.

எங்கும் எளிதாகக் கிடைக்கும் போதைப்பொருள்கள், குற்றப் பதிவேடு பின்னணி கொண்ட குற்றவாளிகளின் புகைப்படத்தைப் பகிர்ந்து வீர தீர பாடல்களை ஒலிக்கவிடுவது, மோசமான வன்முறை வரிகளுடன் கூடிய பாடல்களுக்கு கத்தி, அரிவாளுடன் ரீல்ஸ் போடுவது, பட்டாக் கத்தியை வலிப்பு வந்தது போன்ற உடல்மொழியுடன் சுற்றிக்காட்டுவதை ஹீரோயிசமாக காட்டுவது என எதையும் அரசு கட்டுப்படுத்தவில்லை. இதனால், இயல்பாகவே  வன்முறை உள்ளங்கள் வளர்வதற்கான சூழலை அரசு மறைமுறைமாகவே வளர்த்தெடுக்கிறதா? என்கிற கேள்விகளும் எழுகின்றன. 

தனிநபர் வன்முறைகளிலோ அல்லது கூட்டு வன்முறைகளிலோ நம் கரம் ஏன் அரசை நோக்கி நீள்கிறது? கட்டுப்பாடும், நீதிச் சட்டங்களும் இல்லையென்றால் மனிதன் இறக்கிவிடும் வன்முறைகளை எதிர்கொள்ள முடியுமா? இன்றைய காலத்தில் பள்ளி ஆசிரியர்களாலும், பெற்றோர்களாலும் ஒருவரைத் திருத்த முடியவில்லை என்றால் பிரச்னை எங்கு இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவது அரசின் தார்மிக பொறுப்புகளில் ஒன்று. தன் சொந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் வேறு என்ன அவசர வேலையில் அரசு இருக்கிறது என்கிற குரல்களை அதிகார வட்டத்திலிருப்பவர்கள் கேட்பதில்லையா?

இந்த நாட்டில் குழந்தை தொழிலாளர்களாக இருப்பவர்கள் 14 வயதுக்குக் குறைவாக இருக்கக் கூடாது என சட்டம் சொல்கிறது. வறுமை காரணமாக குடும்ப பாரம் சுமக்கும் குழந்தைகளின் வயதை 14 ஆக நிர்ணயம் செய்திருக்கிறோம். ஆனால், குற்றம் செய்பவர்களின் சிறார் வயதை 18 ஆக வைத்திருக்கிறோம். மூளைத்திறன், பக்குவம் என அனைத்தையும் கணக்கிட்டே இந்த வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போன்ற உலகம் இல்லை. மிக சிறிய வயதிலேயே குழந்தைகள் அனைத்தும் தெரிந்தவர்களாகி விடுகின்றனர். ஒரே வீட்டில் வளரும் ஆணையும், பெண்ணையும் ஒன்றுபோல நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது. ஒவ்வொருவரும் அவரவருக்கான மனிதர்கள், சமூக எதிர்வினைகள், அனுபவங்கள் வாயிலாகவே தன்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் எனும்போது வீட்டைத் தாண்டினால் ஆரோக்கியமான சூழலை அமைத்துத் தர வேண்டியது அரசு அல்லாமல் யாருடைய கடமை?

நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், மாநிலத்தில் கஞ்சா உற்பத்தி ஜீரோ அளவிலேயே இருப்பதாகச் சொல்கிறார். நாளும் வன்முறைகளில் விழிக்கும் குடிமக்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? பெரும்பாலான குற்றங்களுக்குப் பின்னால் போதை தலைவிரித்து ஆடுவதை அனைவரும் அறிவர். இது, சிக்கன் ரைஸ் கடையை அடித்து நொறுக்குவதிலிருந்து தனிநபரின் உயிர் அச்சம் வரை தொடர்கிறது. பெருநகரங்கள் என்றில்லை, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ரௌடி பெருமிதங்களாலும் சாதி ஆதிக்கத்தாலும் கூர் ஆயுதங்கள் கேமரா முன்பு சுழன்றுகொண்டே இருக்கின்றன.

அன்றாட செய்திகளின் வாயிலாக சிறார்களின், இளைஞர்களின் குற்றங்களில் எந்த அதிர்ச்சியும் இல்லாத சூழலும் உருவாகி வருகிறது. குழுவாக சேர்ந்து போதைப்பொருள்களை உபயோகிப்பது, திரும்பித் தாக்காதவர்கள் கிடைத்தால், தங்களின் ஆவேசங்களையும் ஆணவங்களையும் அவர்கள் மீது தாக்குதலாக வெளிப்படுத்துவது என தமிழகம் நவீன காலத்திற்கான ரௌடிகளைக் கண்டு வருகிறது. இந்த வன்முறையாளர்கள் பின் இந்த சாதிதான் என்றில்லாமல் ஒவ்வொரு சாதியும் அவர்களுக்கான உள்ளூர் அரசியல்வாதிகளுடன் துணையாக நிற்கின்றன. 

நம்மூரில் நடக்கும் பெரும்பாலான கூலிப்படை கொலைகளில் ஒருவரைக் கொலை செய்ய  ஆற, அமர திட்டமிட்டு அதற்கென ஒரு குழுவை உருவாக்கிக் கொலை செய்வதை அறிந்திருப்போம். யார் திட்டமிடுவது, யார் சம்பவ இடத்திற்கு செல்வது, எந்த நேரத்தில், எங்கு வைத்துக் கொல்வது என எல்லாம் பரபரப்பான வேகத்தில் நடந்து முடியும். எவ்வளவு சினிமாவில் பார்த்துவிட்டோம்? ஆனால், இதுபோன்ற கூலிக் கொலைகளில் வெட்டுபவருக்கும் வெட்டப்பட்டவருக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. இப்படியான கொலைகளில், ஆயுதத்தால் வெட்டும் நபருக்கு குற்ற உலகில் ‘பேட்ஸ்மேன்’ (batsman) என்று கூறுகிறார்கள்.

இந்த பேட்ஸ்மேனுக்கு கத்தியையோ அரிவாளையோ சரியாகக் கையாளத் தெரிந்திருக்கும். அதாவது, வெட்டினால் உயிர் போக வேண்டும். அப்படிப்பட்ட ஆள்களையே தேர்ந்தெடுத்து கூலிப்படைகள் அனுப்புகின்றன. அதிகரிக்கும் போதை மற்றும் ஆயுத கலாசாரங்களால் பெருமைக்கு பட்டா கத்தியுடன் அலையும் இந்த சிறார்களும் இளைஞர்களும் நாளை பெரிய பேட்ஸ்மேன்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. களத்தில் இறங்கி இவர்களை நெறிப்படுத்த வேண்டிய அரசு , அடுத்தது சிக்ஸா, ஃபோரா? என வேடிக்கை பார்த்தால் யார்தான் இந்த பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்குவது?

தாக்குதலில் ஈடுபட்டபோது...
2026 ஜன.1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்! அறியாவிட்டால் பாக்கெட் காலி!
Summary

weapons, cannabis, drugs usage in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com