
அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இல்லாததால், தான் பங்கேற்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் பலரும் கருத்துக் கூறி வருகின்றனர்.
இதையும் படிக்க | இபிஎஸ் விழா புறக்கணிப்பு? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
இந்நிலையில் செய்தியாளர்களுடன் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன்,
"தில்லி தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு இரு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தவர்களின் பெயர்களைச் சேர்ந்து வாக்களிக்க வைத்திருப்பது, இதற்கான ஆதாரங்கள் இருப்பதை மக்களவையிலே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
காங்கிரஸும் ஆம் ஆத்மியும் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் பாஜகவை வீழ்த்தியிருக்கலாம். ஏனெனில் காங்கிரஸ் 6% வாக்குகள் பெற்றிருக்கும் சூழ்நிலையில் பாஜக 2% வாக்குகள் வித்தியாசத்தில் நிறைய இடங்களை கைப்பற்றியிருக்கிறது. இந்தியா கூட்டணி கட்சியினரிடைய ஒற்றுமையில்லை என்பதும் காரணம்.
இந்த தோல்வியையடுத்து இந்தியா கூட்டணி கூட்டம் கூட்டப்பட வேண்டும். தில்லி தேர்தல் முடிவுகள், இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும். அதிமுக போட்டியிடாதது அரசியல்ரீதியாக அவர்களுக்குப் பின்னடைவு. மக்களிடையே அதிமுகவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியிருக்கிறது.
அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது. அதிமுக பலவீனம் அடையக் கூடாது. அதிமுக பலவீனம் அடைந்தால் அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும்.
இதன் விளைவு, அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் மறைமுகமாக நாதகவுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள் என்றே கருதுகிறோம். அதிமுக உள்கட்சி விவகாரங்களை சரிசெய்துகொள்ள வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். ஏனெனில் மாநிலங்கள் அதனைச் செய்தாலும் மத்திய அரசு அந்த முடிவுகளை ஏற்பதில்லை.
தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த, தரவுகளுக்காக தமிழக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தலாம்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.