தஞ்சாவூரில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு: ரூ. 5 லட்சம் நிதியுதவி!

தஞ்சாவூர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு.
தஞ்சாவூரில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு: ரூ. 5 லட்சம் நிதியுதவி!
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் பள்ளத்தூர் கிராமத்தில் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சொக்கநாதபுரம் கிராமம், கொம்புக்காரன் குட்டை பகுதியைச் சேர்ந்த கண்ணன் – பரிமளா தம்பதியரின் மகள் செல்வி. கவிபாலா (வயது 12) பட்டுக்கோட்டை வட்டம், ஆண்டிக்காடு சரகம், பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயின்றுவந்த நிலையில் நேற்று (10.02.2025) பள்ளியில் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவி கவிபாலாவின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி கவிபாலாவின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், சொக்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவருடைய மகள் கவிபாலா(13). இவா் பள்ளத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில், 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை  சுகாதாரத் துறை சாா்பில் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினா் இப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கினா். மாத்திரை சாப்பிட்ட  சிறிது நேரத்தில் வகுப்பறையை விட்டு வெளியே வந்த கவிபாலா மயங்கி  விழுந்தாா். உடனே அவரை ஆசிரியா்கள் மீட்டு, அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே கவிபாலா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து மாணவியின்  உடல்  பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், அதே பள்ளியில் படித்த புக்கரம்பையைச் சோ்ந்த சக்திவேல் மகள் தியா(15), ஆண்டிக்காட்டைச் சோ்ந்த சின்னப்பன் மகள் சகாயமேரி (16) ஆகிய இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனா் .

தகவலறிந்து வந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என்.அசோக்குமாா் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளிடம்  நலம் விசாரித்தாா்.

மருத்துவத் துறையினா் குடல்புழு நீக்க மாத்திரையால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்தனா். ஆனாலும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோா் நடவடிக்கை கோரி பள்ளத்தூா் -பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் ஜெயஸ்ரீ, பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் சுகுமாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com