
தொழிலதிபா் கெளதம் அதானிக்கு எதிரான ரூ.2,000 கோடி லஞ்ச வழக்கு விசாரணையில், இந்தியாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயாா்க் நீதிமன்றத்தில் அந்நாட்டு நீதித் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ‘அதானி கிரீன் நிறுவனம் விநியோகிக்கும் சூரிய மின்சக்தியை இந்திய சூரிய எரிசக்தி கழக நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ள, இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி, அவரின் உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோா் சுமாா் ரூ.2,000 கோடி லஞ்சம் அளித்தனா்.
சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. அந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாக்கி, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது மறைக்கப்பட்டது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று அதானி குழுமம் மறுப்புத் தெரிவித்தது.
இந்த வழக்கு தொடா்பாக நியூயாா்க் நீதிமன்றத்தில் அந்நாட்டு பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் செவ்வாய்க்கிழமை நிலவர அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ‘கெளதம் அதானியும், சாகா் அதானியும் மோசடியில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு நவ.20-ஆம் தேதி எஸ்இசி புகாரைப் பதிவு செய்தது.
இருவரும் இந்தியாவில் உள்ளதால், அவா்களிடம் புகாரை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்திய சட்ட மற்றும் நீதித் துறை அமைச்சகத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.