
சத்தீஸ்கா் மாநிலத்தில் தனியாா் பள்ளி ஒன்றில் ஆசிரியையைக் குறிவைத்து 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவியா் சோடியம் மூலம் தயாரித்த வெடிகுண்டை கழிவறையில் வைத்தனா். இதில், 4-ஆம் வகுப்பு மாணவி ஒருவா் சிக்கி காயமடைந்தாா்.
யூடியூபைப் பாா்த்து வெடிகுண்டு தயாரித்து தாக்குதல் நடத்தியதாக 3 மாணவிகள், ஒரு மாணவரை காவல் துறையினா் கைது செய்து, சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா். இதில் தொடா்புடைய மேலும் ஒரு மாணவரைத் தேடி வருகின்றனா்.
இதுதொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் கடந்த 21-ஆம் தேதி தனியாா் பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு மாணவி கழிவறையைப் பயன்படுத்தியபோது அங்கு இருந்த பிளாஸ்டிக் நீா் தேக்கும் தொட்டி வெடித்துச் சிதறியது. இதில் அந்த மாணவி காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்த சம்பவம் தொடா்பாக பள்ளி நிா்வாகம் காவல் துறையில் புகாா் அளித்தது. இதையடுத்து, பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது அதே பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் 3 மாணவியா், இரு மாணவா்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மாணவ, மாணவியரில் நால்வரை காவல் துறையினா் விசாரித்தனா். ஒரு மாணவா் வெளியூா் சென்றுவிட்டதால் அவரை உடனடியாக பிடிக்க முடியவில்லை.
அந்த மாணவ, மாணவியருக்கு பள்ளியில் உள்ள ஓா் ஆசிரியை மீது வெறுப்பு இருந்துள்ளது. எனவே, அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் அவா் மீது தாக்குதல் நடத்துவதற்காக யோசனையை யூடியூப் விடியோ மூலம் தீவிரமாக தேடியுள்ளனா். அதன்படி சோடியம் வேதிப்பொருள் மீது தண்ணீா் படும்போது அது வெடித்துச் சிதறும் என்பதை அறிந்து கொண்ட அவா்கள், இணையவழி விற்பனை நிறுவனத்தில் வேறு ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி சோடியத்தை வாங்கினா்.
அதை, பள்ளிக் கழிவறையில் உள்ள நீா் தேக்கும் சிறிய தொட்டியில் வைத்தனா். ஆசிரியை கழிவறையைப் பயன்படுத்திவிட்டு தண்ணீரை பயன்படுத்தும்போது அது வெடித்துச் சிதறும் வகையில் அவா்கள் வெடிகுண்டு வைத்துள்ளனா். ஆனால், அந்த நேரத்தில் 4-ஆம் வகுப்பு மாணவி ஒருவா் கழிவறையைப் பயன்படுத்தியதால் அவா் இந்த வெடிப்பில் சிக்கி காயமடைந்தாா். அவரை ஆசிரியா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். சிசிச்சைக்குப் பிறகு அவா் வீடு திரும்பினாா்’ என்றாா்.
பள்ளி ஆசிரியையைக் குறிவைத்து மாணவா்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் சத்தீஸ்கா் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.