5 நாள்களாக சிங்கங்களுக்கு மத்தியில் உயிர்வாழ்ந்த சிறுவன்!

ஜிம்பாப்வேவில் 5 நாள்களாக சிங்கங்களுக்கு மத்தியில் சிக்கிய சிறுவனைப் பற்றி..
சிறுவன் டினோடேண்டா பூடூ
சிறுவன் டினோடேண்டா பூடூ
Published on
Updated on
1 min read

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் சிங்கங்கள் மற்றும் யானைகள் சூழ்ந்த விளையாட்டுப் பூங்காவில் 5 நாள்களாக சிக்கியிருந்த சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளான்.

வடக்கு ஜிம்பாப்வே பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து வழித் தொலைந்த டினோடேண்டா பூடூ (வயது 8) எனும் சிறுவன் சுமார் 23 கி.மீ தூரம் நடந்து சிங்கங்கள் உள்பட பல வனவிலங்குகள் சூழ்ந்த மடுசடோனா வனவிலங்கு பூங்காவிற்குள் தவறுதலாக நுழைந்துள்ளான்.

5 நாள்களாக வனவிலங்கு பூங்காவிற்குள் இருந்த சிறுவன் வனத்துறையினரால் மீட்கப்பட்டதாக ஜிம்பாப்வே நாட்டு மக்களவை உறுப்பினர் முட்டுசா மரோம்பெட்சி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை உறுதி செய்த ஜிம்பாப்வே நாட்டு பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை ஆணையம், உயிர்பிழைத்த அந்த சிறுவனுக்கு 8 வயதில்லை 7 வயது எனவும் அவன் தனது வீட்டிலிருந்து வழிமாறி சுமார் 49 கி.மீ நடந்து வனப்பூங்காவிற்குள் நுழைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 40 க்கும் மேற்பட்ட சிங்கங்கள் வாழும் அந்த காட்டில் அந்த சிறுவன் 5 நாள்களும் காட்டுப் பழங்களை பறித்து சாப்பிட்டும், தனக்கு தெரிந்த உத்திகளைப் பயன்படுத்தியும் உயிர் வாழ்ந்துள்ளான். வறட்சி மிகுந்த பகுதியை பூர்வீகமாகக் கொண்ட அவன், காய்ந்த ஆற்றுப்படுகையில் குச்சிகளினால் குழித்தோண்டி அதில் ஊறிய தண்ணீரைக் குடித்து உயிர் வாழ்ந்துள்ளான்.

இதையும் படிக்க: துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து 27 புலம்பெயர்ந்தோர் பலி: 83 பேர் மீட்பு!

சிறுவனை தேடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த நியாமின்யாமி எனும் சமூகத்தினர் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து தினமும் மேளங்கள் அடித்து தேடியுள்ளனர்.

இந்நிலையில், ஐந்தாவது நாளன்று மடுசடோனா வனப்பூங்கா அதிகாரிகள் தங்களது வாகனத்தில் பூங்காவினுள் அந்த சிறுவனைத் தேடி ரோந்து சென்றுள்ளனர். அப்போது, வாகனத்தின் சத்தம் கேட்டு அந்த சிறுவன் அவர்களை நோக்கி ஒடிச் சென்றுள்ளான். ஆனால், அதற்குள் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

பின்னர், சில மணிநேரம் கழித்து அவர்கள் மீண்டும் அதே இடத்திற்கு சென்றபோது, அங்கு சிறுவனின் கால்தடங்களை பார்த்து அங்கு தேடி அந்த சிறுவனை மீட்டுள்ளனர்.

சுமார் 1,470 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள அந்த வனப்பூங்காவில் ஏராளமான வரிக்குதிரைகள், சிங்கங்கள் மற்றும் யானைகள் வாழ்ந்து வருகின்றன.

முன்னதாக, சிறுவன் சிக்கியிருந்த அந்த வனவிலங்கு பூங்காவில்தான் முன்பு ஆப்பிரிக்காவிலேயே அதிக சிங்கங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com