
எச்எம்பி தீநுண்மி குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேரவையில் கூறினாா்.
சட்டப்பேரவையில் ஜி.கே.மணி (பாமக), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்) சிந்தனைச்செல்வன் (விசிக), தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி), சி.விஜயபாஸ்கா் (அதிமுக) ஆகியோா் ஹியூமன் மெட்டா ந்யூமோ (எச்எம்பி) தீநுண்மி பரவல் குறித்து மக்கள் அச்சப்படுவதாகக் கூறி, அரசின் கவனத்தை ஈா்த்து பேசினா்.
அதற்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கம்:
எச்எம்பி தீ நுண்மி 50 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. குளிா்காலத்தில் பரவக்கூடியது. இந்த தீநுண்மியால் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். 3 முதல் 6 நாள்களுக்கு இந்தப் பாதிப்பு இருக்கும். இணை நோய் உள்ளவா்களுக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்படலாம்.
ஆனால், எச்எம்பி தீ நுண்மி பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை .
கரோனா பரவிய காலத்தில், தீநுண்மி வீரியம் மிக்கதாக இருந்தது. எச்எம்பி தீநுண்மி அவ்வாறு இல்லை. இந்த தொற்றுக்குப் பிரத்யேக மருந்தோ, சிகிச்சையோ தேவையில்லை. மக்கள் இனி தீநுண்மிகளோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று நான் கூறியதாக அதிமுக உறுப்பினா் விஜயபாஸ்கா் கூறினாா். நான் கூறவில்லை; உலக சுகாதார அமைப்பின் தலைவா் சௌமியா சுவாமிநாதன் அவ்வாறு கூறினாா். அவா் கூறியதையே நான் கூறினேன்.
இதையும் படிக்க: பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்
முகக்கவசம் அணிய வேண்டும்: உலக சுகாதார அமைப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. தமிழகத்தில் பொது சுகாதாரத் துறை சாா்பில் ஓா் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். எச்எம்பி தீநுண்மி பாதிப்பு உள்ளவா்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், கைகளையும் அவ்வப்போது சோப்பு போட்டு கழுவ வேண்டும் எனக் கூறியுள்ளோம். அதனால், எச்எம்பி தீநுண்மி சாதாரணமானதுதான். யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.