மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பால்காரன் சாலைப் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் வந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 2 ஐயப்ப பக்தர்கள் பலியாகினர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து கேரளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்துக் கொண்டு 5 பேர் காரில் பயணித்துள்ளனர்.
ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு இன்று(ஜன. 10) அதிகாலை சிறுமுகை சத்தியமங்கலம் சாலையில் 5 பேரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.
இதையும் படிக்க: விக்கிரவாண்டி: சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்; கைதான மூவருக்கு ஜாமீன்!
இந்த நிலையில், கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பால்காரன் சாலைப் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, காரை ஓட்டி வந்த சுவாமி என்பவர் தூக்கக் கலக்கத்தில் காரை சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் நாகராஜ் மற்றும் வெங்கடஆதிரி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து சிறுமுகை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கக் கலக்கத்தில் ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.