எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த கடத்தப்பட்ட கர்ப்பிணி பெண் மீட்பு !

எடப்பாடி அருகே வீட்டில் இருந்த பெண்ணை, பட்டப்பகலில் கத்திமுனையில் கும்பல் கடத்திச் சென்ற நிலையில் அந்த பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
தனுஷ்கண்டன்  - ரோஷினி
தனுஷ்கண்டன் - ரோஷினி
Published on
Updated on
1 min read

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கணவா் வீட்டில் இருந்த பெண்ணை, பட்டப்பகலில் கத்திமுனையில் கும்பல் கடத்திச் சென்ற நிலையில் அந்த பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், செட்டிமாங்குறிச்சி கிராமம், சின்னதாண்டவனூரைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் தனுஷ்கண்டன் (25). இவா், ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவருக்கும் இவருடன் வேலை செய்த தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த சின்னம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகள் ரோஷினி என்பவருக்கும் (22) பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனா்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டு எடப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனா். இருவரும் வெவ்வேறு சமூகத்தினா் எனக் கூறப்படுகிறது.

இருவரும் திருமண வயதை எட்டியிருந்ததால் போலீஸாா் பெற்றோரை சமாதானம் செய்து கணவா் தனுஷ் கண்டனுடன் ரோஷினியை அனுப்பி வைத்தனா். அதன்பின்னா், ரோஷினி கணவா் வீட்டாருடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை தனுஷ்கண்டன் வீட்டிற்கு வந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் கையில் பட்டா கத்தியுடன் அதிரடியாக தனுஷ்கண்டன் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த ரோஷினியை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றது.

கும்பலைத் தடுக்க வந்த அந்த பகுதி மக்கள், தனுஷ்கண்டனை அந்தக் கும்பல் கத்தியைக் காண்பித்து மிரட்டி பெண்ணைக் கடத்திச் சென்றது.

இதுகுறித்து தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில், எடப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து கும்பலைத் தேடி வந்தனர். கடத்தப்பட்ட பெண் ரோஷினி, கா்ப்பமாக இருப்பதாக உறவினா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் எண்ணை வைத்து உரிமையாளரை கண்டுபிடித்த போலீஸார், கடத்தப்பட்ட பெண் ரோஷினியை பத்திரமாக மீட்டு கணவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

கடத்தலில் தொடர்புடைய கடத்தப்பட்ட பெண் ரோஷினியின் தந்தை குமாரசெல்வம், தாய் சித்ரா,பெரியப்பா லட்சுமணன், சகோதரி சௌமியா, தந்தையின் நண்பர் ஜோதிடர் கருப்பண்ணன், வெங்கடாசலம் ஆகிய ஆறு பேரையும் ஈரோடு மாவட்டம் சித்தோடு டிஎஸ்.பாளையம் பகுதியில் உள்ள வெங்கடாஜலம் வீட்டில் பதுங்கி இருந்த போது நள்ளிரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை எடப்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முழு விசாரணைக்குப் பிறகே கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து முழு விவரம் தெரிய வரும்.

24 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணை மீட்ட காவல் துறையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com