தொழில்துறையினரை ஏமாற்றுவதுதான் அரசின் நோக்கமா? - அண்ணாமலை

தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - அண்ணாமலை.
Annamalai
அண்ணாமலை (கோப்புப்படம்)எக்ஸ்
Published on
Updated on
2 min read

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தொடர்ச்சியாக மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் திமுக, விளம்பரத்துக்காக, கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, தொழில்துறையினரையும் ஏமாற்றி வருகிறது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் மட்டும் 12kw மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் சுமார் 52,367 சிறு தொழிற்சாலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் திமுக அரசின் மின்கட்டண உயர்வால், இந்தச் சிறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே, இந்தச் சிறு தொழில்களுக்கான மின்சார இணைப்பு வகையை III (B) ல் இருந்து III A (1) ஆக மாற்ற வேண்டும் என்று, தொழில் நிறுவனக் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதனால், மின் கட்டணம், ஒரு யூனிட்டுக்கு ரூ.9.60 ல் இருந்து ரூ.4.65 ஆகக் குறையும்.

திமுக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்து, பல ஆர்ப்பாட்டங்களை நடத்திய பிறகு, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று, 12 kw மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் நிறுவனங்களை, III-B வகையிலிருந்து, III-A(1) வகைக்கு மாற்றுவது குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தை பெற்ற பின் பரிசீலிக்கப்படும் என்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை அடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அனுப்பிய கடிதத்தில், 12 kw மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கட்டண வகையை, III-B வகையிலிருந்து, III-A(1) வகைக்கு மாற்றலாம் என்றும், இந்த மாற்றம், இனி வரும் காலங்களுக்கான மின்கட்டணக் கணக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்த நிறுவனங்கள், 12 kw மின்சுமைக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது, தானியங்கி முறையில், அவர்களுக்கான மின்கட்டணம் III-B பிரிவுக்கு மாற்றப்படும் என்றும், கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், இந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம், உயர்த்தப்பட்ட மின் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: திமுக 7-வது முறையாக ஆட்சியமைக்கும்: மு.க. ஸ்டாலின்

இது குறித்து, தொழில் அமைப்புகள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும் வகையில், கடந்த ஜனவரி 23, 2025 அன்று தமிழ்நாடு மின்விநியோகக் கழகம் கோயம்புத்தூர் பகுதியின் தலைமைப் பொறியாளர் அனுப்பியிருக்கும் கடிதத்தில், தானியங்கி முறையில், இந்த 12kw மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களை, III-A(1) பிரிவுக்கு மாற்றுவது சாத்தியமில்லை என்றும், தொழில் நிறுவனங்கள் ஒவ்வொன்றும், இந்த மாற்றத்திற்காகத், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அப்படி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு, விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்துதான் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தபடி, அப்போதிருந்தே இந்தக் கட்டண மாற்றம் நடைமுறைக்கு வந்ததாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். 12kw மின்சுமைக்கு அதிகமாகப் பயன்படுத்தும் நிறுவனங்களை அதிக கட்டணப் பிரிவுக்கு மாற்ற, மென்பொருள் மூலமாகத் தானாகவே மாற்றம் செய்ய இயலும்போது, குறைந்த கட்டணப் பிரிவுக்கு மாற்றம் செய்வதற்கு ஏன் தொழில் நிறுவனங்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது திமுக அரசு? வெறும் கண்துடைப்புக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, தொழில்துறையினரை ஏமாற்றுவதுதான் நோக்கமா?

12 kW மற்றும் அதற்கும் குறைவான மின்சுமைகளைக் கொண்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அதிக கட்டணத்தை வசூலித்து வந்திருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம். 12kw மற்றும் அதற்குக் குறைவான மின்சுமையைப் பயன்படுத்தும் இந்த நிறுவனங்கள் அனைத்தையும், உடனடியாக III-B வகையிலிருந்து, III-A(1) வகைக்கு மென்பொருள் வாயிலாக, தானியங்கி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், இதற்கான அறிவிப்பு வெளிவந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்த நிறுவனங்களிடம் வசூலித்த அதிகப்படியான கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com