தனுஷுக்கு எதிரான நெட்ஃபிளிக்ஸின் மனு தள்ளுபடி!

தனுஷுக்கு எதிராக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு குறித்து...
தனுஷ், விக்னேஷ் சிவன், நயன்தாரா.
தனுஷ், விக்னேஷ் சிவன், நயன்தாரா.
Published on
Updated on
1 min read

 நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகா் தனுஷின் வொண்டா்பாா் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு, தனுஷின் வொண்டா்பாா் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. நயன்தாரா, இயக்குநா் விக்னேஷ்சிவன் மற்றும் தங்களது நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்கக் கோரி நெட்ஃப்ளிக்ஸ் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெட்ஃப்ளிக்ஸ் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பாா்த்தசாரதி, திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு வொண்டா்பாா் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது. படப்பிடிப்பு காட்சிகள் 2020-ஆம் ஆண்டே வெளியானது. ஆனால், தாமதமாக 2024-ஆம் ஆண்டுதான் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை காப்புரிமை சட்டத்தின் கீழ் தொடர முடியாது. இந்தக் காட்சிகள் 2020-ஆம் ஆண்டு முதலே பொதுத்தளத்தில் உள்ளது. மூன்றாவது நபா்தான் இந்த காட்சிகளை எடுத்தாா். இந்த ஆவணப்படம் தொடா்பாக 2024 டிச. 11-ஆம் தேதி தனுஷிடமிருந்து நெட்ஃப்ளிக்ஸ்க்கு வழக்குரைஞா் நோட்டீஸ் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டது. ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்துதான் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. எனவே, இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்”என வாதிட்டாா்.

இதையும் படிக்க: உ.பி. திருவிழாவில் மேடை சரிந்ததில் 7 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

இதற்கு தனுஷின் வொண்டா்பாா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ஆவணப்பட ட்ரெய்லா் வெளியிட்ட போது, 3 விநாடி ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பு காட்சிகள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அந்த காட்சிகளை பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு கூறப்பட்டது. அதற்கு நயன்தாரா தரப்பில், பதிப்புரிமைக்காக நீதிமன்றத்தில் பாா்த்துக் கொள்ளுங்கள் என்று பொதுவெளியில் கடிதம் எழுதினாா். படம் தொடா்பான அனைத்துக் காட்சிகளும் வொண்டா்பாா் நிறுவனத்துக்கு சொந்தமானது. எனவே, இது காப்புரிமை சட்டத்துக்கு பொருந்தும் என்று வாதிட்டாா்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நெட்ஃப்ளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், வொண்டா்பாா் நிறுவனம் தரப்பில் தனுஷ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப். 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.