
இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெறுவதினால் அங்கு வருகைத் தருமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஹிரோஷிமா, நாகசாகி மேயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த 1945 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது அச்சுப் படையைச் சேர்ந்த ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசித் தாக்குதல் நடத்தியது.
இதில், ஹிரோஷிமாவில் 1,40,000 பேரும் நாகசாகியில் 74,000 பேரும் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த பெரும்பாலான மக்கள் அணு கதிர்வீச்சின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு பின்னாட்களில் பலியாகினர்.
இந்த கொடூரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இந்தாண்டுடன் (2025) 80 ஆண்டுகள் நிறைவடைவதைத் தொடர்ந்து அங்கு வருகைத் தருமாறு 2வது முறையாக தற்போது பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகர மேயர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: ஐசிசி தலைமைச் செயல் அலுவலர் ராஜிநாமா! பாகிஸ்தான் திடல் விவகாரம் காரணமா?
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அந்நாட்டிற்கு வருகைத் தந்து அணு குண்டு தாக்குதலில் உயிர்பிழைத்த மக்களிடம் நேரில் உரையாடி அவர்களது அமைதிக்கான ஆசையை தெரிந்துக்கொள்ளுமாறும், உலகத்திலுள்ள அணு ஆயுதங்களை ஒழித்து அமைதியை நிலைநாட்ட தலைமைத் தாங்குமாறு அதிபர் டிரம்பை வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, கடந்த 2010 ஆம் ஆண்டு அமெரிக்க தூதர் ஜான் ரூஸ் என்பவர்தான் ஹிரோஷிமா நினைவேந்தலில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க பிரதிநிதி ஆவார். பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபர் ஜோ பைடன் அணுகுண்டுத் தாக்குதலின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
லட்சக்கணக்கான மக்களை கொன்ற இந்த தாக்குதலுக்கு இதுவரையில் அமெரிக்கா மன்னிப்பு கேட்காத நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பின் முந்தைய ஆட்சியின்போது (2017-2021) இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் அப்போது கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.