
தில்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது என்ற நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், தளர்வுகளை கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றன.
தில்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசுபாட்டால் பலரும் பாதிப்படைந்துள்ளனர். இதனால், அதிகளவில் மாசுபாட்டை ஏற்படுத்தக் கூடிய 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கத் தடைவிதிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களும் தில்லியில் உள்ள எந்த எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்படாது என கடுமையான நடைமுறை அமல்படுத்தப்பட்டது. மேலும், எரிபொருள் நிரப்பவரும் பழைய வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதலும் செய்யப்பட்டன. இதனால், பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், பல்வேறு சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக இந்த வாகனங்களுக்கு உடனடியாகத் தடைவிதிக்க முடியாது என தில்லி அரசு காற்று தர மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “இந்த நடவடிக்கையால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் அவர்களுடன் நிற்கிறது” என்றும் தெரிவித்தார்.
தில்லியில் சுமார் 60.14 லட்சம் பதிவு நீக்கம் செய்யப்பட்ட 10 முதல் 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் உள்ளன. அவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. தில்லியில் 41 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 18 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 62 லட்சத்திற்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் இருப்பதாகவும் வாகன் தரவுத்தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க... பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.