
தமிழ்நாடு முழுவதும் கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் பங்கேற்கும் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 பிரிவில் 3,935 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை 13.89 லட்சம் போ் எழுதுகின்றனர். இதில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 போ் ஆண்கள். 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 போ் பெண்கள். 117 போ் மூன்றாம் பாலினத்தவா் தேர்வெழுதுகின்றனர்.
தோ்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் 314 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில், 94,848 போ் தோ்வு எழுதுகின்றனா். இதற்காக, 311 தோ்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகின்றன. இந்த மையங்களில் 4,922 போ் தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 3,935 காலி பணியிடங்களுக்கான தேர்வை 13,89,738 பேர் எழுதுகிறார்கள். சென்னையில் மட்டும் 94 ஆயிரத்து 848 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன கண்காணிப்பாளர் என 25 பதவிகளுக்கு இந்த தேர்வை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம் என்பதால் நிறைய பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இந்த தேர்வில் தமிழ் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இருக்கும். மற்ற தேர்வுகளுக்கு பல கட்டங்களில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை கிடைக்கும். ஆனால், இந்த தேர்வு சிங்கிள் ஸ்டேஜில் நடக்கும். அதனால் இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் வேலை கிடைக்கும்.
மூன்று மாதங்களில் தேர்வு முடிவுகள்
குரூப் 4 தேர்வு நடைமுறைகள் விடியோ பதிவு செய்யப்படுகிறது. குரூப் 2 தேர்வை 2.5 லட்சம் பேர் எழுதியதால் அதனை இரண்டு மாதத்தில் வெளியிடுவதாக சொன்னோம். ஆனால் குரூப்-4 தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள் அதனால் முடிவுகள் வெளியாக சிறிது காலம் ஆகும். தேர்வுத் தாள்கள் ஒரு மாதத்தில் திருத்தப்பட்டு அதிகபட்சமாக மூன்று மாதங்களில் முடிவுகள் வெளியாகும். அதற்கு முன்பும் கூட வெளியாக வாய்ப்புள்ளது.
கடந்தாண்டு தேர்வு முடிவு வெளியாக நான்கு முதல் நான்கரை மாதம் ஆனது. ஆனால் இந்த ஆண்டு சில விஷயங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளதால் மூன்று மாதத்திற்குள் முடிவு வெளியாகும்.
10,000 பேர் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் கடந்தாண்டு 10,721 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 11,027 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4,300 பேர் தேர்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தமாக சுமார் 10,000 பேர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் வாரம் 15 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும். இந்த ஆண்டு அட்டவணைப்படி தேர்வுகளை நடத்தி விட்டோம். குரூப் 2ஏ தேர்வு அறிவிப்பு வெளியிட்டவுடன் நடைபெறும்.
தேர்வுத் தாளை கணினி தான் திருத்தப் போகிறது. மாறுபட்ட பதில்கள் இருந்தால் தேர்வர்கள் அதனை கோரலாம். விடைத்தாள் ஒரு மாதத்தில் திருத்தப்பட்டாலும் ரிசர்வேஷன் முறைப்படி ரேங்கிங் போட்டு கவுன்சிலிங் அழைக்கப்படுவார்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு
கடந்த ஆண்டுகளில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் இந்த தேர்வு நடத்தப்பட்டு வந்தது. தற்போது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதனால் தான் இந்த எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இன்னும் மூன்று மாதங்கள் வரை எந்த துறையில் காலியிடங்கள் வந்தாலும் அதையும் சேர்த்துக் கொண்டு, இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படும்.
தற்காலிக பணியிடங்களை அந்தந்த துறை சார்பில் அவர்கள் நிரப்பி கொள்வார்கள். ஆனால் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பணியாளர்களை தேர்வு செய்வார்கள்.
பேப்பர் ஒட்டியதால் சர்ச்சை
வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு, மத்திய இடத்திலிருந்து மாவட்ட தலைநகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வினாத்தாள்கள் சீல் வைக்கப்பட்டவுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்களில் கொண்டு சென்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படுகிறது. வினாத்தாள் இருக்கும் ஒவ்வொரு பண்டிலும் சீல் வைக்கப்பட்டிருக்கும். தேர்வு அறைக்கு சென்ற பிறகு வட்டாட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் முன்னிலையில் அந்த சீல் திறக்கப்படுவதை உறுதிபடுத்துவார்கள். மூடப்பட்ட வாகனத்தில் போலீசார், டிஎன்பிஎஸ்சி அலுவலர், வருவாய் அலுவலர்கள் பொறுப்பில் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படுகிறது. மதுரையில் பேப்பர் ஒட்டியதால் சர்ச்சையாகிவிட்டது. ஆனால் முறைப்படி எல்லா இடங்களிலும் பாதுகாப்பாக வினாத்தாள்கள் சென்றுள்ளது .
சர்ச்சைக்குள்ளாகும் கேள்விகளை தவிர்க்கவும்
தேர்வுகளுக்கு தயார் செய்யப்படும் கேள்வித்தாள்களை யாராலும் பார்க்க முடியாது. அதை தயாரிக்கும் குழு மட்டும்தான் பார்க்க முடியும். சர்ச்சைக்குள்ளாகும் கேள்விகள், அரசியல் கேள்விகள் போன்ற கேள்விகளை எடுக்க வேண்டாம் என கேள்வித்தாள் தயாரிக்கும் குழுக்களுக்கு நாங்கள் ஆலோசனை கொடுத்திருக்கிறோம். அப்படி யாராவது சர்ச்சைக்குள்ளாகும் கேள்விகளை எடுத்தார்கள் என்றால் அவர்களை கேள்விகள் தயாரிக்கும் குழுவில் இருந்து நீக்கி விடுவோம் என தெரிவித்துள்ளோம். அதையும் மீறி ஒரு சிலர் அந்த கேள்விகளை கேட்கும் போது தர்ம சங்கடம் ஆகிவிடுகிறது என்றார்.
Group 4 Exams for 3,935 posts including Village Administrative Officers and Junior Assistants are being held across Tamil Nadu starting Saturday (July 12).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.