மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை என காங்கிரஸ் விமரிசனம் செய்துள்ளது.
மோடி-டிரம்ப்
மோடி-டிரம்ப்
Published on
Updated on
2 min read

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை என காங்கிரஸ் விமரிசனம் செய்துள்ளது.

இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தாா்.

மேலும், இந்தியாவுடன் மிகப்பெரிய அளவில் வா்த்தகப் பற்றாக்குறை உள்ளது. எனவே, 25 சதவிகித வரியுடன் அபராதத்தையும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு இந்தியா செலுத்த வேண்டும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டாா்.

இந்நிலையில், மோடி - டிரம்ப் இடையிலான நட்பை காங்கிரஸ் விமரிசனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் இடையிலான நட்புக்கு அர்த்தம் இல்லை.

அமெரிக்க அதிபர் அவமானம் செய்தபோது, அமைதியாக இருந்தால் சலுகைகள் கிடைக்கும் என பிரதமர் மோடி நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. பிரதமர் மோடி இந்திராவிடம் இருந்து உத்வேகம் பெற்று அமெரிக்க அதிபரை எதிர்த்து நிற்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், இந்தியா மீதான டிரம்பின் அணுகுமுறை மேலும் மேலும் வலுத்து வருகிறது.

மே 10 முதல் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை, தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக நான்கு வெவ்வேறு நாடுகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 30 முறை கூறியுள்ளார்.

ஜூன் 18 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாக இருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதியை வெள்ளை மாளிகையில் மதிய உணவிற்கு வரவேற்றார்.

ஜூலை 30 ஆம் தேதி அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு 25 சதவிகித வரி விதித்தார், ரஷியாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் மற்றும் பாதுகாப்பு கொள்முதல்களுக்கு கூடுதல் அபராதம் விதித்தார். மேலும், ஈரானுடன் கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருள்கள் வர்த்தகம் மேற்கொண்டததற்காக குறைந்தது 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதித்தார்.

அதே நாளில், பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளை ஆராய்ந்து மேம்படுத்துவதில் அமெரிக்கா உதவும் என்றும் டிரம்ப் அறிவித்தார். இது ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடமிருந்து பாகிஸ்தானுக்குப் பெற்றுள்ள நிதி உதவியிலிருந்து வேறுபட்டது.

தற்போது பாகிஸ்தானுடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதால், வரும் காலங்களில் பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலைகூட வரலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, அதிபர் ஷி ஜின்பிங்குடன் முன்பு செய்ததைப் போலவே, அதிபர் டிரம்புடனான தனது தனிப்பட்ட நட்பிலும் நிறைய முதலீடு செய்துள்ளார். ஆனால் இப்போது இரு தலைவர்களும் தங்கள் ஈகோ மற்றும் சுயநலம் மூலம் தங்களை எவ்வாறு கையாள்வது என்பதை நன்கு புரிந்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

ராகுல் தாக்கு

இதனிடையே பிரதமர், அதானி என்ற ஒரே ஒரு நபருக்காக மட்டுமே வேலை செய்கிறார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டிரம்ப் உண்மையை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி

இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா். அது உண்மைதான். இது பிரதமா் மற்றும் மத்திய நிதியமைச்சரைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரியும். இந்திய பொருளாதாரம் ‘சரிந்துவிட்ட பொருளாதாரம்’ என்பதை அனைவரும் அறிவா். இந்த விஷயத்தில் டிரம்ப் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

தொழிலதிபா் கெளதம் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது. மிகச் சிறந்த வெளியுறவுக் கொள்கையை இந்தியா கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறுகிறாா்.

ஒருபுறம் இந்தியாவை அமெரிக்கா துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம் சீனா துரத்துகிறது. மேலும், ஆபரேஷன் சிந்தூா் குறித்து விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை உலகம் முழுவதும் அனுப்பினீா்கள். ஆனால், ஒரு நாடுகூட பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. நாட்டை எப்படி வழிநடத்திக் கொண்டிருக்கிறீா்கள்?

மக்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோது அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் பெயரையோ, சீனாவின் பெயரையோகூட பிரதமா் மோடி குறிப்பிடவில்லை. பாகிஸ்தானுக்கு எந்தவொரு நாடும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதையும் அவா் தனது உரையில் சுட்டிக்காட்டவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை வா்த்தகத்தைப் பயன்படுத்தி அமெரிக்காதான் நிறுத்தியது என்று 30 முறை டிரம்ப் கூறியுள்ளாா். இந்தச் சண்டையின்போது 5 போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்ற தகவலையும் டிரம்ப் வெளியிட்டாா். ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் இந்திய பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

அதிகாரம் யாரிடம் உள்ளது?

இதற்கெல்லாம் பிரதமா் மோடியால் ஏன் பதிலளிக்க முடியவில்லை? காரணம் என்ன? அதிகாரம் யாரிடம் உள்ளது?

நாடடின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை மத்திய அரசு அழித்துவிட்டதுதான் நாட்டின் முன் உள்ள மிகப் பெரிய பிரச்னையாக இன்றைக்கு உள்ளது. பாஜக அரசு நாட்டை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. அதானி என்ற ஒரு நபருக்காக மட்டும் பிரதமா் பணியாற்றுகிறாா். அனைத்து சிறுதொழில்களும் துடைத்தெறியப்பட்டுவிட்டன.

டிரம்ப் சொல்வதை மோடி கடைப்பிடிப்பார்

அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் நிச்சயம் மேற்கொள்ளப்படும். ஆனால், அதை டிரம்ப்தான் வரையறுப்பாா். அமெரிக்க அதிபா் என்ன செய்யச் சொல்கிறாரோ, அதை அப்படியே பிரதமா் மோடி கடைப்பிடிப்பாா் என கூறியுள்ளார்.

Summary

President Trump criticises India strongly. He imposes penalties on India for trading with Russia. He sanctions Indian companies for trading with Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com